Published : 29 Aug 2020 07:22 AM
Last Updated : 29 Aug 2020 07:22 AM

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர், போலீஸாரை தாக்க முயன்றதாகக் கூறி அயனாவரம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டசம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பான வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரியும், சங்கரின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரியும், சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இறந்த சங்கரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நினைத்தால் போலீஸாரிடமிருந்து உடலைப் பெறுவதற்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டியதுதானே, அதைவிட்டு அடக்கம் செய்த பிறகு தற்போது மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கோரியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் நடுவர் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், இறந்தவரின் உடலை வாங்க அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மறுநாள்தான் உடல் ஒப்படைக்கப்பட்டது என்றும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டு உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x