

கட்டிட வரைபட அங்கீகார அனுமதி வழங்குவதற்கு துணை முதல்வர் உத்தரவிட்டும் சிஎம்டிஏ திட்ட அலுவலர் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டு 550-க்கும் மேற்பட்டோர் மனு செய்துள்ளனர். இந்த மனுக்களை திட்ட அலுவலர் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும். ஆனால், கட்டிட வரைபட அங்கீகார அனுமதியை, குறித்த காலத்தில் வழங்காமல் தாமதப் படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சுமார் 900 மனைகளுக்கு அனுமதி வழங்காமல் கடந்த ஓர் ஆண்டாக கிடப்பில் உள்ளதாக வீடுகட்ட மனு செய்த சிலர் கூறுகின்றனர்.
`வீடு கட்டுவோர் நலன் கருதியும், வரன்முறை விண்ணப்பம் மற்றும் வரைபட அனுமதியை தாமதம் இன்றி, குறித்த காலத்தில் வழங்க திட்ட அலுவலர் முயற்சிக்க வேண்டும். மேலும் பரங்கிமலை ஒன்றியத்தில் இரு அலுவலரை நியமிக்கவேண்டும்’ என துணை முதல்வர் உத்தரவிட்டது போல் சிஎம்டிஏ அதிகாரிகள் இரு அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே மனுக்கள் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிஎம்டிஏ-வின் தலைமை திட்ட அலுவலர் பெரியசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கோப்புகள் தேங்கிக் கிடப்பது உறுதியானது.
இதையடுத்து அனைத்து கோப்புகளையும் முறையாக ஆய்வு செய்து விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 10 சதவீத பணிகளே முடிந்துள்ளதால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து திட்ட அலுவலர் கூறும்போது, "நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக அனுமதி வழங்கப்படும். அதே சமயம் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துதான் அனுமதி வழங்க முடியும்'' என்றார்.