Published : 29 Aug 2020 07:10 AM
Last Updated : 29 Aug 2020 07:10 AM

தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்ற அறிவிப்பால் 24 அரியர்ஸ் பாடங்களில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாணவர்- “நீங்க வேற லெவல்..” என முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோ

சஞ்சய்

திருச்சி

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த சூழலில் கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுதொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 24 அரியர்ஸ் வைத்திருந்த திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் என்.சஞ்சய் (21) என்பவர், ஒரே உத்தரவின் மூலம் அனைத்து பாடத்திலும் தன்னை தேர்ச்சி பெறவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தற்போது வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், “சத்தியமாக இப்படி நடக்கும்என யோசித்துக்கூட பார்க்கவில்லை. முதல்வர் பழனிசாமிதான் கடவுள்.இந்த மனது யாருக்கும் வராது. கட்டணம் செலுத்திய அனைவரும்தேர்ச்சி’’ என்று சொல்லிவிட்டார். இதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கிறேன். இனிமேல், இதுபோல படிக்காமல் இருக்க மாட்டோம். கண்டிப்பாக கடைசி ஆண்டில்நன்றாக படித்து பொறியாளராக ஆவோம். நான் 4-ம் ஆண்டு போகிறேன். மீதமுள்ள 2 செமஸ்டர்களிலும் நன்றாக படித்து நிச்சயம் வெற்றி பெற்று காட்டுகிறேன்.

நீங்கள் செய்த இந்த உதவியே போதும் சார். நான் எங்கே செல்ல வேண்டும் என்ற எனது வாழ்க்கையை, நீங்கதான் இப்போது தீர்மானித்துள்ளீர்கள். பொறியியல் படிப்பை நிறுத்திவிட்டு, வேறு ஏதாவது செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட சமயத்தில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு என்னை பொறியாளர் ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை, எனக்குள்ளேயே நீங்கள் கொண்டு வந்துவிட்டீர்கள். நீங்க வேற லெவல் சார். நீங்கள் இப்போது அந்த ஆர்வத்தைக் கொண்டு வந்துவிட்டீர்கள். நீங்கள் முதல்வராக இருக்க வேண்டியவர் இல்லை. அதற்குமேல...” எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவர் சஞ்சயைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நான் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறேன். இதுவரை 30 பாடங்களுக்குத் தேர்வு எழுதி, 6 பாடங்களில் மட்டுமே தேர்ச்சிபெற்றிருந்தேன். 24 அரியர்ஸ் இருந்தது. படிக்க முடியாமல் நான்பெயில் ஆகவில்லை. கல்வி கற்பிக்கும் முறை பிடிக்காமல், நான் பெயிலாகினேன்.

10-ம் வகுப்பில் 427 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 905 மதிப்பெண்களும் எடுத்தேன். பொறியியல் படிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும், அதனைகற்பிக்கும் முறை பிடிக்கவில்லை.இந்த சூழலில் கடந்த பருவத்தில் 24 பாடங்கள் அரியர்ஸ் எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தேன்.

பாஸ் ஆனாலும், ஆகாவிட்டாலும் பிரச்சினையில்லை என்ற நினைப்பு எனக்குள் இருந்தது. காரணம், நான் பொறியியல் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேறு ஏதாவது செய்யப் போய்விடலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த முடிவை முதல்வர் மாற்றிவிட்டார். அவர் உத்தரவிடாவிட்டால் கண்டிப்பாக என்னால் 24 பாடங்களிலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. இப்படியொரு வாய்ப்பை நான் நினைத்துக்கூட பார்க்கவேயில்லை. எங்கள் மீது முதல்வர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவாவது, 4-ம் ஆண்டில் சிறப்பாக படித்து நிச்சயம் நான் பொறியாளர் ஆவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x