

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு மர்ம கும்பல் நுழைந்து காவலாளியை கொலைசெய்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக நடந்தது.
அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோர் ஏற்கெனவே 4 அரசு தரப்பு சாட்சிகளை மிரட்டியதால் தான் அவர்களின் ஜாமீன் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர்களுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கினால் மறுபடியும் மற்ற சாட்சிகளையும் மிரட்டுவர். எனவே ஜாமின் வழங்கக் கூடாது’’ என்றார். அதையடுத்து நீதிபதி, இருவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.