சென்னையின் சில பகுதிகள் போதைப் பொருள் கடத்துவோரின் புகலிடமாக உள்ளதா? - டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையின் சில பகுதிகள் போதைப் பொருள் கடத்துவோரின் புகலிடமாக உள்ளதா? - டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னையில் உள்ள சில பகுதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த பெண் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடிசைகளை அமைத்திருந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி , நாவலூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால்அவர்களில் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட பிழைப்புக்காககஞ்சா விற்பனை செய்வது போன்றசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான குற்ற வழக்குகள் கண்ணகி நகர் பகுதியில் வசிப்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும்சமூக நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து சேர்க்கிறோம். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, குற்றங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா, அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனவா, அவர்களின் அன்றாட வருவாயை பெருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

குறிப்பாக கண்ணகிநகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகள் போதைப் பொருள்கடத்தல்காரர்களின் புகலிடமாகவும், குற்றங்களின் கூடாரமாகவும் உள்ளதா என்பது குறித்தும் தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in