Published : 29 Aug 2020 06:50 AM
Last Updated : 29 Aug 2020 06:50 AM

ஆந்திரா, கர்நாடகாவில் தொற்று அதிகரிப்பு: தமிழகத்தில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள் ளார்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்தஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் 14 ஆயிரம், ஆந்திராவில் 10 ஆயிரம், கர்நாடகாவில் 9 ஆயிரம் பேர் என தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், இதை ஓர் எச்சரிக்கையான காலமாக கருதி, மக்கள்கவனமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தினமும் 75 ஆயிரம் பரிசோதனைகள் என இதுவரை 45 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை மாதத்தில் இருந்து தினமும் 6 ஆயிரத்துக்கும் குறைவானோர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் 1,300-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

எப்போதும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மூச்சுத் திணறல் வந்த பிறகு தொற்றாளர்களைக் காப்பாற்றுவது கடினம். எனவே கரோனா அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தற்போது கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களிலும், சென்னையில் அடையாறு, கோடம்பாக்கம், திருவிக நகர் பகுதிகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. விதிகளை மீறும் பொதுமக்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிப்பது, மாநகராட்சி மட்டுமல்லாது போலீஸாரும் அபராதம் விதிப்பது தொடர்பான அவசரச் சட்டம் தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, “கரோனாவை 100 சதவீதம் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. இறப்பைக் குறைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கரோனா தொற்று மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அதனால் சுயக்கட்டுப்பாட்டுடன் மக்கள் இருக்கவேண்டும். கரோனா தொற்றுதடுப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் பா.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x