Published : 29 Aug 2020 06:39 AM
Last Updated : 29 Aug 2020 06:39 AM

8-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு?- ஆட்சியர்கள், மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கரோனா பாதிப்புதொடர்ந்து அதிகரித்து வருகிறது.நாள்தோறும் ஏறத்தாழ 6 ஆயிரம்பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர். கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிக்கவேண்டும், இ-பாஸை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. இ-பாஸ் நடைமுறை இருந்தால்தான் தொற்று தொடர்புகளை கண்டறிய முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால், இ-பாஸ் முறை தொடரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், 8-ம் கட்டமாக ஊரடங்கை செப்டம்பர் மாதமும் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். காலையில் மாவட்டஆட்சியர்களுடன் காணொலி மூலம் நடக்கும் ஆலோசனையில், மாவட்டவாரியாக தொற்று நிலவரம், தடுப்புப் பணிகள் குறித்து விவாதிப்பதுடன், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்.

பிற்பகல் 3 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஏற்கெனவே,ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம்என்று முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதையே இன்றும் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. ஆனால், தொற்றைகருத்தில்கொண்டு சில தளர்வு களுடன் மீண்டும் ஊரடங்கு ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர், இன்று மாலை அல்லது நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x