

காங்கிரஸ் எம்.பி.யும் தொழிலதிபருமான வசந்தகுமார் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28.8.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின்:
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான எச்.வசந்தகுமார் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரைத் தொலைபேசியில் அழைத்து உடல் நலம் விசாரித்தேன். 'விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில்' கரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து அநியாயமாகப் பிரித்துச் சென்று விட்டது அதிர்ச்சியளிக்கிறது.
'முயற்சி உடையான்; இகழ்ச்சி அடையான்' என்பதற்கேற்ப, கடின உழைப்பு, சலியாத முயற்சி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்வில் சாதித்துக் காட்டியவர். தொகுதி மக்கள் தன்னை எளிதில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பினைத் தவறாமல் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
'வெற்றிக் கொடிகட்டு' 'வெற்றிப் படிக்கட்டு' ஆகிய புத்தகங்களை எழுதிய அவர், இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு - 'வசந்த் அண்ட் கோ' என்ற நிறுவனத்தைத் தனது கடின உழைப்பால் உருவாக்கிக் காட்டி முன்னுதாரணமாக விளங்கியவர்.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்திற்கு உதவிடும் வகையில், 'வசந்த் டிவி'-யை தோற்றுவித்து நடத்திய அவர், சோனியா காந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.
அரசியல் வேறு - மக்கள் பணி வேறு - வர்த்தகம் வேறு என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்விற்கு ஒரு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், 'இலக்கியச் செல்வர்' குமரி அனந்தன், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான வசந்தகுமார் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும்.
பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வழி வந்த அவர் இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்து, தொழில் நுணுக்கங்களை கற்று வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை நிறுவி இன்று 82 கிளைகளுடன் விரிவுபடுத்தி தொழில் செய்து வருகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார்.
மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தமது முழு நேரத்தையும் காங்கிரஸ் இயக்கத்தின் மூலமாக மக்கள் தொண்டாற்றுவதற்காக செலவிட்டவர் வசந்தகுமார்.
வசந்தகுமாரின் மறைவின் மூலம் தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்து விட்டது. எப்போதும் சிரித்த முகத்துடன் இயக்கப்பணி ஆற்றிவந்த அவர், என் மீது அளவற்ற அன்புகொண்டிருந்த என் உடன்பிறவா சகோதரரை நான் இழந்திருக்கிறேன். நானே மிக கடுமையான துக்கத்தில் இருக்கிறபோது யாருக்கு என்னால் என்ன ஆறுதல் கூறமுடியும்!
தமிழக காங்கிரஸின் அப்பழுக்கற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதோடு, கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
மறைந்த வசந்தகுமாரின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அரசியல் பணிக்காக பலமுறை என்னை சந்தித்து பேசியிருக்கிறார். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக மிகச் சிறப்பாக மக்கள் பணி செய்து வந்தார்.
உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும்.
வசந்தகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும் மதிமுகக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவுத் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்த்குமார் (70) மருத்துவமனையில் இன்று (28.08.2020) மாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
சலிப்பறியா உழைப்பில் வசந்த் & கோ வர்த்தக நிறுவனத்தை உருவாக்கியவர். அது ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி படர்ந்து, விரிந்து, வளர்ந்திருப்பது அவரது வாழ்நாளின் மிகப் பெரும் சாதனையாகும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்டு. 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
சில நாட்களுக்கு முன்னர் கரோனா தாக்குதலால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றவர். அதில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் என்பது தாங்கவொணாத் துயரமாகும்.
அன்னாரின் மறைவுக்கும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குமரி அனந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர் எம்.பி.:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான அன்பு சகோதரர் வசந்தகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இயற்கை எய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், மன வருத்தமும் தருகிறது.
வசந்தகுமாரின் அகால மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சகோதரர் குமரிஅனந்தன் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்:
காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான பிரபல தொழிலதிபர் வசந்தகுமார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த வசந்தகுமாரின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பாகும்.
வசந்தகுமாரின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:
தன் வாழ்க்கையை தமிழக மக்களின் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திய உன்னத மனம் படைத்தவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் & கோ என்ற மாபெரும் நிறுவனத்தின் நிறுவனருமான அண்ணன் வசந்தகுமார் கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைந்தது அதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது.
அவரது மறைவு என்னை சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வாடும் அவரது மூத்த சகோதரர் குமரி அனந்தனுக்கும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் தெரிவித்தனர்.