

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது காட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கரூரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்டத் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது பாஜகவினர் அவருக்குப் பட்டாசு வெடித்து, வேல் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அலுவலகத்துக்கு முன்புறம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த திறந்தவெளி வாகனத்தின் மீது நின்று அங்கிருந்த கட்சியினரிடம் சிறிது நேரம் பேசினார்.
‘ஊரடங்கு அமலில் இருக்கும்போது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமல், ஊரடங்கு விதிகளை மீறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உதவி ஆய்வாளர் சுகன்யா, காட்டூர் போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில், காட்டூர் போலீஸார் தொற்று நோய்த் தடுப்புச் சட்டம் 143, 269, 270, 285, 341 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார், பாஜக மாநில நிர்வாகிகள் ஜி.கே.எஸ் செல்வக்குமார், எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி மற்றும் சில நிர்வாகிகள் மீது இன்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.