

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகும் வழிமுறைகள் தொடர்பாக பாஜக செயற்குழுவில் டெல்லியிலிருந்து காணொலி மூலம் விவாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசால் மக்களுக்குப் பயனில்லை என்றும் விமர்சித்துள்ளனர்.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, அகில இந்திய பொதுச்செயலர் சந்தோஷ் ஜி ஆகியோர் டெல்லியிலிருந்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.
புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகம், காரைக்கால், மாஹே, ஏனாம், மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
செயற்குழுக் கூட்டம் தொடர்பாகப் பாஜக நிர்வாகிகள் கூறுகையில், ''வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கக்கூடிய முறைகள் பற்றி டெல்லியிலிருந்து நிர்வாகிகள் கருத்துகளைத் தெரிவித்தனர். வரும் செப்டம்பர் 17 பிரதமர் மோடி பிறந்த நாளை மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சிறந்த முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக 70-வது பிறந்த நாளையொட்டி 70 ஏழை மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் உதவிகளும், மரக்கன்றுகள் நடுதல், ரத்த தானம், நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவி செய்ய உள்ளோம்.
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுவதால் மக்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காத அரசாக நடப்பதாகவும் விவாதிக்கப்பட்டது. பாஜக வரும் 2021 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரி மாநிலத்தை மிக உயர்வான நிலைக்கு மாற்றவும் உறுதி எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தனர்.