

கோவை மாநகரக் காவல்துறையில் உயரதிகாரிகளின் காலிப் பணியிடங்கள், சாதாரண விடுமுறை, கரோனா தொற்றால் தனிமை, சிகிச்சை போன்ற காரணங்களால், வழக்கு விசாரணையில் தொய்வு, ரோந்துப் பணி பாதிப்பு சூழல் போன்றவை ஏற்பட்டுள்ளன.
கோவை மாநகரக் காவல்துறை நிர்வாகம், காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் இயங்குகிறது. தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, 8 போக்குவரத்து, 3 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. சைபர் க்ரைம், மாநகரக் குற்றப்பிரிவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன. தினசரி அடிதடி, தகராறு, திருட்டு, கொள்ளை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் பெறப்படுகின்றன. கோவையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநகரில் முதலில் போத்தனூர் காவல்நிலையக் காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து குனியமுத்தூர், வெரைட்டிஹால் சாலை, உக்கடம், சாயிபாபா காலனி, பீளமேடு, கடைவீதி உள்ளிட்ட காவல் நிலையங்களின் காவலர்களும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பணிக்கு வராமல் தனிமைப்படுத்தப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், காவல்துறை உயரதிகாரிகள் சிலரின் பணியிடம் காலியாக உள்ளது.
வழக்கு விசாரணை தொய்வு
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ''இன்றைய நிலவரப்படி மத்திய, கிழக்கு உட்கோட்டக் குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள், நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு, குற்றப்பதிவேடு உதவி ஆணையர்கள் பணியிடம் காலியாக உள்ளன. இதில் கிழக்கு உட்கோட்டத்தின் கீழ் 3, மத்திய உட்கோட்டத்தின் கீழ் 4 காவல் நிலையங்கள் வருகின்றன. இவ்விரு உட்கோட்டங்களிலும் வர்த்தகப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குற்றச் சம்பவங்கள் நடந்தால் விசாரிக்கக் காவல் ஆய்வாளர்கள் இருந்தாலும், வழக்கு விசாரணையைக் கண்காணித்துத் தீவிரப்படுத்த உதவி ஆணையர்கள் இல்லாதது வழக்கு விசாரணைக்குத் தொய்வே.
தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு கூடுதல் துணை ஆணையர் மற்றும் சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு, போத்தனூர் குற்றப்பிரிவு, நில அபகரிப்புப் பிரிவு, சைபர் கிரைம், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, கட்டுப்பாட்டு அறை, மேற்கு போக்குவரத்துப் பிரிவு, கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் ஆய்வாளர்கள் விடுமுறையில் உள்ளனர்.
கடைவீதி சட்டம் ஒழுங்கு, உக்கடம் சட்டம் ஒழுங்கு, சாயிபாபா காலனி சட்டம் ஒழுங்கு, ரத்தினபுரி சட்டம் ஒழுங்கு, ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு, மத்திய மகளிர் காவல் நிலையம், கிழக்கு மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் கரோனா தொற்று, அறிகுறி போன்றவற்றால் தனிமையிலும், சிகிச்சையிலும் உள்ளனர். அதிகாரிகளின் காலிப் பணியிடம், சாதாரண விடுமுறை, தொற்றால் விடுமுறை போன்றவற்றால் பணியில் இருக்கும் அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த காலிப் பணியிடங்களைக் கூடுதல் பணியாகப் பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இரவு ரோந்துப் பணி பாதிக்கும் சூழல், வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படும் சூழல் உள்ளது. இருக்கும் சில அதிகாரிகளே தொடர்ந்து காலை, இரவுப் பணிகளைத் தொடர்ந்து பார்க்கும் சூழலும் உள்ளது'' என்றனர்.
பொறுப்பு அதிகாரிகள் நியமிப்பு
இதுகுறித்து மாநகரக் காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ''மாநகரக் காவல்துறையில் உயரதிகாரிகளின் காலிப் பணியிடங்கள், விடுமுறையில் உள்ள அதிகாரிகளின் பணியிடங்களுக்கு தற்காலிகப் பொறுப்பு அடிப்படையில், மாற்றுத் துறைகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை தொய்வடையும் சூழலோ, ரோந்துப் பணி பாதிக்கும் சூழலோ இல்லை'' என்றார்.