Published : 28 Aug 2020 07:09 PM
Last Updated : 28 Aug 2020 07:09 PM

மாநில அரசுகளைத் திவாலாக்கும் மத்திய அரசின் முயற்சி: மார்க்சிஸ்ட் கண்டனம்

தற்போது ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தர முடியாது. ரிசர்வ் வங்கியில் வட்டிக்குக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் கூறியிருப்பது சட்டத்தை மீறிய செயல் மட்டுன்றி மாநில மக்களுக்குத் துரோகம் இழைக்கும் செயலாகும். அப்படி ஏதாவது கடன் வாங்க வேண்டுமென்றால் அதைச் செய்ய வேண்டியது மத்திய அரசே தவிர, மாநில அரசுகள் அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“சரக்கு மற்றும் சேவை வரிகள் மன்றத்தின் கூட்டம் புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளைத் திவால் நிலைக்குத் தள்ளும் ஆபத்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்கள் தங்கள் சொந்தத் தேவைக்கு சுயேச்சையாக வரிவிதிப்பு செய்யும் அதிகாரம் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது.

பேரிடர் நிவாரணத்திற்காக கூட மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே மாநில அரசாங்கம் நிதி திரட்ட முடியும். இதனால் மாநில அரசுகள் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை ஏற்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 2017-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்வதற்கான சட்டமும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கைக் கொடுக்க மறுப்பதோடு தற்போது கரோனா காலத்தில் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கு உதவி செய்ய முடியாது என மறுத்துள்ளது.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து மாநில அரசு ஜிஎஸ்டி பங்கைக்கூட பல மாநிலங்களுக்கு முழுமையாக மத்திய அரசாங்கம் வழங்காத நிலை உள்ளது. 2017-18 ஆம் ஆண்டு மாநில அரசுக்கு வர வேண்டிய ஐஜிஎஸ்டி தொகை ரூபாய் 4000 கோடி இன்று வரையில் மத்திய அரசால் வழங்கப்படவில்லை.

இதுதவிர 15-வது நிதிக்குழு வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு மொத்தமாக வழங்க பரிந்துரை செய்த தொகை ரூ.74,000 கோடி. ஆனால், மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை வெறும் ரூபாய் 30,000 கோடி மட்டுமே. அதாவது தமிழக அரசுக்கு வர வேண்டிய வருவாய்ப் பற்றாக்குறை மானியம் ரூபாய் 4,000 கோடியில் ரூபாய் 1,600 கோடி மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதையும் கூட மத்திய அரசு இன்றுவரை முழுமையாகக் கொடுக்கவில்லை.

மத்திய அரசின் இந்தப் போக்கின் காரணமாக மாநில அரசுகள் கடும் நிதிப் பற்றாக்குறையிலும், சுமையிலும் சிக்கியுள்ளன. தமிழக அரசின் சொந்த வரி வருவாய் குறைந்துள்ள நிலையில் இந்தக் காலத்தில் கரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக மருத்துவச் செலவுகள், பொருளாதார உதவிகள், மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அரசுகளே செலவழித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்குப் போதுமான நிதி இல்லாததால் பல்வேறு மாநில அரசாங்கங்களும் சந்தையில் கடன் வாங்கியிருக்கின்றன. கடன் வாங்கும் அளவை அதிகரிப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் ரிசர்வ் வங்கி கடனளிக்கும் என்கிற நிர்பந்தத்தையும் மத்திய அரசு திணித்துள்ளது.

இதனால் மாநில அரசுகள் அதிக வட்டிக்கு வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக கிடைத்த தகவலின் படி தமிழக அரசு மட்டும் ரூபாய் 37,500 கோடி வெளிச்சந்தையில் கடன் வாங்கியுள்ளது. இவ்வளவு நெருக்கடியில் நின்று கொண்டு கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான போராட்டத்திலும் ஈடுபடும்போது, மத்திய அரசு ஜிஎஸ்டி நிவாரணத் தொகையைத் தர முடியாது எனக் கைவிரித்திருப்பது சட்டவிரோதமான செயலாகும்.

தற்போது இது கடவுளின் செயலால் ஏற்பட்டது என்று நிதியமைச்சர் சொன்னாலும் இந்த ஆண்டு பட்ஜெட் உரையின் போதே நிதியமைச்சர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, மாநிலங்களை ஓட்டாண்டிகளாக்கி அன்றாடச் செலவுகளுக்கே மத்திய அரசிடம் கையேந்த வைக்கும் நிலைக்கே தள்ளுவதுதான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.

தற்போது ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தர முடியாது ரிசர்வ் வங்கியில் வட்டிக்குக் கடன் பெற்றுகொள்ளலாம் என நிதியமைச்சர் கூறியிருப்பது சட்டத்தை மீறிய செயல் மட்டுன்றி மாநில மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். அப்படி ஏதாவது கடன் வாங்க வேண்டுமென்றால் அதைச் செய்ய வேண்டியது மத்திய அரசே தவிர, மாநில அரசுகள் அல்ல.

தான் இயற்றிய ஒரு சட்டத்தையே மத்திய அரசு கடவுளின் பெயரைச் சொல்லி மீறுவது அரசமைப்புச் சட்டத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும். மத்திய அரசின் இந்த சட்டவிரோதப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் வரி மற்றும் கடன் தள்ளுபடி செய்து வருகிறது. இப்போதும் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்க முனைந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதும், ரிசர்வ் வங்கி அல்லது வெளி மார்க்கெட்டில் வட்டிக்கு கடன் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறுவதும் மாநில அரசுகளின் செயல்களை முடக்கிக் கட்டிப்போடுவதாகும்.

பேரிடர் காலத்தில் அரசின் வருவாயைப் பெருக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள முடியும். உதாரணமாக, பெரும் சொத்து படைத்தோர் மீது ஒரு சதவீத சொத்து வரி விதித்தால் கூட சில லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதன் மூலம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி காப்பாற்ற முடியும்.

எனவே, ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கியோ, வேறு வகைகளிலோ மாநிலங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டியது மத்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். மத்திய அரசு அதைச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

மாநில அரசு, மத்திய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவதோடு, இதற்கெதிராக போராடுகிற இதர மாநில அரசுகளோடு இணைந்து நின்று மத்திய அரசின் இந்த அராஜகத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x