

நெடுஞ்சாலைகளில் விரிவாக்கப் பணிக்காக வெட்டும் ஒவ்வொரு மரத்துக்கு பதிலாக 10 மரங்கள் நடும் உத்தரவை முறையாக அமல்படுத்தாவிட்டால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
புதிதாக ஒரு சாலை அமைக்கவும், சாலை விரிவாக்க பணிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். கடந்த 2013ம் ஆண்டின் சுற்றுச்சூழல் சட்ட திருத்தத்தின் படி, நூறு கிலோ மீட்டருக்குள் சாலை விரிவாக்கம் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற தேவையில்லை.
இந்த சட்டத் திருத்ததால் அனுமதி பெறாமல் பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டு , சூழல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே 2013ம் ஆண்டின் சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு,"புதிய சாலை அமைப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம், சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் , 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என கூறியுள்ள நிலையில், அது போல மரங்கள் நடப்படுகின்றனவா? அதனை முறையாக நடைமுறைப்படுத்தாததால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, வெட்டப்படும் 1 மரத்திற்கு பதிலாக, 10 மரங்களை நடும் உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத நிலை தொடர்ந்தால், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.
பின்னர், மனு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18 .தேதிக்கு ஒத்திவைத்தனர்