

திருப்பத்தூர் மாவட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளை நடத்தினாலோ, இந்நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு மேல் கூடினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 2,700-ஐக் கடந்துள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் இ-பாஸ் தளர்வு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளால் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் வந்து செல்கின்றனர்.
இதையும் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (ஆக.28) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது. இந்த உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் இதைப் பின்பற்றுவது இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அதேநேரம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை, கிருமி நாசினியைப் பயன்படுத்துவது இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சமீபகாலமாகக் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியைப் போலவே, இறப்பு நிகழ்வுகளிலும் அதிகக் கூட்டம் கூடுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் திருமண நிகழ்ச்சி என்றால் 50 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது. இறப்பு நிகழ்வு என்றால் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்றாகக் கூடும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கட்டாயமாகக் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
இதற்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் உரிய அனுமதியுடன், உறுதிமொழி ஒப்புகையைச் சம்பந்தப்பட்டவர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.