கோவில்பட்டி அருகே கிராம மக்கள் முயற்சியில் 30 ஆண்டுகளாக தூர்ந்து கிடந்த நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணி

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் முயற்சியில் 30 ஆண்டுகளாக தூர்ந்து கிடந்த நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணி
Updated on
1 min read

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் தங்களது சொந்த முயற்சியில் 30 ஆண்டுகளாக தூர்வாராமல் தூர்ந்து கிடந்த நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் அருகே அய்யநேரி கிராமத்தில் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட செவல்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் மானாவாரி நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

மேலும், இந்த குளம் நிரம்பினால் அய்யநேரி, அப்பநேரி, சுபா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் உயரும்.

மழைக்காலங்களில் காட்டாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பிள்ளையார்நத்தம் நீராவி நாயக்கர் குளத்துக்கு வந்து, அங்கிருந்து மாறுகால் பாயும் தண்ணீர் பெரிய ஓடை வழியாக வெங்கடாசலபுரம் பூவணன் காவலன் கண்மாய்க்கும், அங்கிருந்து அய்யநேரி செவல்குளத்துக்கு வந்தடைகிறது.

இந்நிலையில், செவல்குளத்துக்கு வரும் நீர்வரத்து ஓடையான பெரிய ஓடை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரி பராமரிக்கப்படாததால் மண் மேடாகி, ஆங்காங்கே கரைகள் பெயர்ந்து, கருவேல செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இதனால் செவல்குளம் முழுவதுமாக நிரம்பவில்லை. குளம் வறண்டது மட்டுமல்லாமல் விவசாயமும் பொய்த்து, நிலத்தடி நீர் மட்டமும் குறைந்தது. இதையடுத்து பெரிய ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பிள்ளையார்நத்தம், அய்யநேரி, வெங்காடசலபுரம் கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் பெரிய ஓடையை தூர்வாரி, தடுப்பணை கட்டி, கரைகளை பலப்படுத்த முடிவெடுத்தனர்.

இதற்காக ரூ.15 லட்சம் நிதி திரட்டினர். இதையடுத்து நேற்று பெரிய ஓடை தூர்வாருவதற்கான தொடக்க பூஜைகள், பிள்ளையார்நத்தம் மாலில் வரும் ஓடை பகுதியில் நடந்தது.

முன்னாள் ராணுவ வீரர் காளியப்பன் தலைமை வகித்தார். வெங்கடாசலபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜாராம், தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ரெங்கநாயகலு கூறும்போது, இப்பகுதியில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடக்கிறது. நஞ்சை நிலங்களும் உள்ளன.

நீராவி நாயக்கர் குளம் நிரம்பி மாறுகால் பாய்ந்து வரும் தண்ணீர் இங்குள்ள நிலங்களை பசுமையாக்கியது. இந்த ஓடை தூர்ந்து போனதால் பல விவசாயிகள், தங்களது பணியை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

தற்போது கிராம மக்கள் இணைந்து மண் மேடுகளை அகற்றி, தூர்வாரி வருகின்றனர். இதில், ஓடையில் சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு மண்மேடுகளை அகற்றி செப்பினிடப்பட உள்ளது. இதனால் தண்ணீர் சீராக சென்று செவல்குளம் நிரம்பும். இதன் மூலம் விவசாயம் முன்பை போல் செழிப்படையும், என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in