

திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்காக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி தண்ணீரை திறந்து வைத்தார். இதன்மூலம் 2548 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அமைச்சர் ராஜலெட்சுமி இன்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கொடுமுடியாறு நீர் தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார்பருவ சாகுபடிக்காக வரும் 25.11.2020 வரை வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும்.
அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில்,முன்னுரிமை அளிக்கப்பட்ட 2548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை,வடமலையானகால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம், நீர்வரத்து மற்றும் இருப்பை பொறுத்து,தேவைக்கேற்ப,தண்ணீர் திறந்துவிடபடும்.
எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப்பெறவில்லையென்றால் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சிமுறையில் வழங்கபடும்.
விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஐ.எஸ். இன்பதுரை, நாராயணன், சிற்றாறு செயற்பொறியாளர் மாரியப்பன்,உதவி செயற்பொறியாளர் மணிகண்ட ராஜன், உதவி பொறியாளர்கள் மூர்த்தி, கார்த்திக் ராஜா ராம், பாஸ்கர்,நாங்குநேரி வட்டாட்சியர் நல்லையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.