அழகுக்கலை நிபுணரை ஆட்டோ ஓட்டுநராக மாற்றிய கரோனா!

அழகுக்கலை நிபுணரை ஆட்டோ ஓட்டுநராக மாற்றிய கரோனா!
Updated on
2 min read

கரோனா காலம் தங்கள் தொழிலை முடக்கிவிட்டதாக வேதனைக் குரல் எழுப்பிய பலரைக் கடந்திருக்கிறோம். அவர்களுக்கு மத்தியில், இந்தக் கரோனா காலம் தனக்குப் புதிய பாதையைக் காட்டியிருப்பதாக நம்பிக்கையோடு பேசுகிறார் சுகந்தி.

நாகர்கோவிலை அடுத்த பொழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி அடிப்படையில் அழகுக்கலை நிபுணர். கரோனா காலத்தில் திருமணங்கள் நடப்பது சொந்தங்களுக்குள் சுருங்கிப்போக, மணமகள் அலங்காரம் செய்யக் கேட்டு வரும் அழைப்புகள் வெகுவாகக் குறைந்துபோயின. கூடவே, ஆடம்பரச் செலவு எனக் கரோனா காலத்தில் பெண்களின் அலங்காரச் செலவுகளும் குறைந்தன. இன்னும் சில பெண்கள் கரோனா அச்சத்தில் அழகு நிலையங்களின் பக்கமே செல்லவில்லை. இதனால் தொழில் வாய்ப்பு பாதிக்கப்பட, சுகந்தி முழுநேர ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசிய அவர், ''என்னோட மகன் இன்ஃபேன்ட் இப்போ ஏழாம் கிளாஸ் படிக்கிறான். அவனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் கொடுக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம். அதுக்காகவே கொஞ்ச வருசத்துக்கு முன்னாடியே 45 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சு அழகுக்கலை நிபுணருக்கான கோர்ஸ் படிச்சேன். எங்க பக்கத்து கிராமமான புதூரில் அழகு நிலையம் திறந்தேன். ஆனா, எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் வரலை. உடனே அதை மூடிட்டு, நாகர்கோவிலில் இன்னொரு தோழி நடத்திவந்த அழகு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

இதுபோக, திருமண வீடுகள்ல மணப்பெண் அலங்காரத்துக்கும், பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் மேக்கப் போடவும் போவேன். ஆனால், கரோனா காலத்தில் இந்தத் தொழில் முற்றாக முடங்கிடுச்சு. கூடவே, பொது முடக்கத்தில் சிலகாலத்துக்கு அழகு நிலையங்களைத் திறக்கவே அனுமதிக்கலை. பயத்தால வாடிக்கையாளர்கள் குறைஞ்சுட்டதால இன்னும்கூட அந்தத் தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பலை.

இந்தச் சூழல்ல என்னோட உறவுக்காரர் ஒருத்தர் ஆட்டோ ஓட்டுறதைப் பார்த்தேன். நாமும் ஏன் ஆட்டோ ஓட்டக்கூடாதுன்னு தோணுச்சு. அதுவரைக்கும் எனக்கு டூவீலர் மட்டும்தான் ஓட்டத் தெரியும். இருந்தாலும் எனது விருப்பத்தை அவர்கிட்டச் சொன்னேன். அவரும் ‘நம்பிக்கையோட ஆட்டோ வாங்கு; நான் கத்துத் தர்றேன்’னு சொன்னார்.

உடனேயே இருந்த சேமிப்புப் பணத்தை வைத்து புது ஆட்டோ வாங்கிட்டேன். நான்கே நாட்களில் அதை ஓட்டவும் கத்துக்கிட்டேன். கூட்ட நெரிசலுக்குள்ள எப்படி ஆட்டோ ஓட்டுறதுன்னு நாகர்கோவில்ல இன்னொரு தம்பி கத்துக் குடுத்தார். ஆட்டோ ஓட்டத் தொடங்கி இப்ப ரெண்டு மாசமாச்சு. அழகுக் கலைத் தொழில்ல கெடச்ச வருமானத்தைவிட இதுல கூடுதலாவே வருமானம் வருது. இதுல நுட்பமான இன்னொரு விஷயமும் இருக்கு. இப்ப பஸ் போக்குவரத்து இல்லாததால எங்க கிராமத்துல இருந்து நாகர்கோவிலுக்குப் போறவங்க ஆட்டோவுலதான் போய் ஆகணும். அதனால எனக்கும் அடிக்கடி சவாரி வருது; வருமானமும் நல்லா இருக்கு.

பஸ் ஓட ஆரம்பிச்சுதுன்னா வருமானம் எப்படி இருக்கும்னு தெரியல. இருந்தாலும் நியாயமான கட்டணமே வாங்குறதால எனக்கும் பொழப்பு ஓடும்னு நினைக்கிறேன். அந்த நம்பிக்கையில கரோனா கட்டுப்பாடு முடிஞ்சாலும் ஆட்டோவே ஓட்டிப் பொழைச்சிக்கிறதுன்ற முடிவோட இருக்கேன்.

வயசானவங்க, நோயாளிங்கன்னு தேவைப்படறவங்களை உரிய நேரத்துல மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போறதும், அவங்கள மறுபடியும் வீட்டுல கொண்டாந்து விடுறதும் மனசுக்குத் திருப்தியான வேலையா இருக்கு. அழகுக்கலை நிபுணரா இருந்தப்ப மத்தவங்கள அழகுபடுத்திப் பாத்தேன். இந்த சேவைத் தொழில் என்னோட மனசையே அழகாக்கி இருக்கு'' என்றபடியே ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார் சுகந்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in