

திட்டமிட்ட சுகாதார நடவடிக்கைகளால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் பழனிசாமி, 26 பயானிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், ரூ.25.54 கோடியில் 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.32.16 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது முதல்வர், “கடலூர் நகரம் முன்னேறும் வகையில் கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் பழனிசாமி விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்த கலந்தாய்வு கூட்டங்களில் தொழில் துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், விருத்தாசலம் கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசின் திட்டமிட்ட சுகாதார நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் அதிமுகவின் ஆட்சி காலத்தில் அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 7 புதிய தொழிற்சாலைகள் தொடங்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின் அடிப்படையில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், இதுவரை 36 ஆயிரத்து 500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். இதன் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை எளிதில் கண்டறிய முடியும். மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளோம். மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
முன்னதாக நடைபெற்ற நலத்திட்ட விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித் தேவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல். சி.ஜே.குமார், கடலூர் மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், அதிமுக நகர துணை செயலாளர் கந்தன், அதிமுக பிரமுகர் கே.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
நாகப்பட்டினம்
கடலூரைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, புதிய வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்து, ரூ.1.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:
வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி, வரும் 29-ம் தேதி மருத்துவக் குழுவினர், மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில்தான் தமிழகத்தில் விரைவில் பொதுப் போக்குவரத்து சேவையை தொடங்குவது, ஊரடங்கு நீடிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை எதுவும் தெரிவிக்க முடியாது. 2-வது தலைநகர் குறித்து ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு முதல்வர் கூறினார். அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.