

கரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும்விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 4.25 லட்சம் விவசாயிகள், விவசாய மின் இணைப்புக்காகக் காத்திருப்பதாகவும், இந்த ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில், சுமார்600 விவசாயிகள் மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் செங்கல்பட்டு கோட்டத்துக்கு 279 மின்இணைப்பு மட்டுமே வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது மின்மோட்டார் வாங்கி அதன் ரசீதை காண்பித்து புதியமின் இணைப்பைபெறலாம் என விண்ணப்பித்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின்வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதுகுறித்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக கரோனாவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. விளைபொருட்களும் சரியாக விலை போகவில்லை. மேலும் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது.
மின் மோட்டார் வாங்கி அதன்ரசீதை காண்பித்தால் மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், வருவாய் இன்றி தவிக்கும் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற தேர்வு செய்யப்பட்டும் இணைப்பை பெற முடியாமல் உள்ளது. எனவே விவசாயிகள் மின் மோட்டார் வாங்குதற்கான பொருளாதார சூழலை மனதில்கொண்டு, மின் இணைப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். வருவாய் இன்றி தவிக்கும் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற தேர்வு செய்யப்பட்டும் இணைப்பை பெற முடியாமல் உள்ளது.