Published : 28 Aug 2020 07:36 AM
Last Updated : 28 Aug 2020 07:36 AM

சென்னையில் அதிகரிக்கும் கொசுத் தொல்லை: உற்பத்தி ஆதாரமாக மழைநீர் வடிகால்கள்

மாதவரம் பகுதி மழைநீர் வடிகாலில் தேங்கிஉள்ள கழிவுநீரில் உற்பத்தியாகி இருக்கும் அதிக அளவிலான கொசுப் புழுக்கள். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை

சென்னையில் கடந்த இரு மாதங்களாககொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது.மழைநீர் வடிகால்கள் கொசு உற்பத்தி ஆதாரங்களாக மாறியிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அனைத்து துறை பணியாளர்களும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அவ்வப்போது சென்னையில் மழையும் பெய்கிறது. கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடாத நிலையில் கடந்த இரு மாதங்களாக அதிக அளவில்கொசு உற்பத்தியாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக கழிவுநீரில் உற்பத்தியாகும் ‘கியூலெக்ஸ்’ வகை கொசுக்களே அதிகஅளவில் இருப்பதாகவும், இவை பராமரிக்கப்படாத கழிவுநீர் தேங்கியுள்ள மழைநீர் வடிகால்களில் அதிக அளவில் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகராட்சியில் சுமார் 1,894 கி.மீ நீளத்தில் 7 ஆயிரத்து 350 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்தமழைநீர் வடிகால்களில் பெரும்பாலானவையில் மாநகராட்சிக்கு தெரிந்தே கழிவுநீர் விடப்படுகிறது.

மழைநீர் வடிகாலை தூர் வாரி பராமரிக்கவும், கொசு உற்பத்தியை தடுக்கவும் ரூ.36 கோடியே 40 லட்சம் செலவில் 7 நவீன தூர் உறிஞ்சு வாகனங்களை மாநகராட்சி வாங்கியுள்ளது. ஆனால் அதை இதுவரை கொசு ஒழிப்புக்கு பயன்படுத்தபடவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாதவரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, "இப்போதுதான் கரோனா தடுப்பு பணி நடக்கிறது. பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலில் கழிவுநீர் தேங்கி அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மாநகராட்சி சார்பில் புகை மருந்து, தெளிப்பு மருந்து போன்றவற்றை தெளித்தும் கொசுக்கள் அழியவில்லை" என்றனர்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோனைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் தூர்ந்து இருப்பதால், கடல் அலை ஆறுகளுக்குள் நுழைய முடியவில்லை. கொசு உற்பத்திக்கு இது ஒரு முக்கிய காரணம். அதை சரிசெய்ய பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

நீர்வழித் தடங்களில் உருவாகும் கொசுப்புழுக்களை அழிக்க, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ட்ரோன்கள் மூலமாக கொசுப் புழு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் மழைநீர் வடிகாலில் கொசு உற்பத்தியாவதை தடுக்கவும், அந்த துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x