

கோயம்பேடு சந்தையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் மலர், காய், கனி மொத்த விற்பனை சந்தைகளை அமைக்க சிஎம்டிஏ நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோயம்பேடு சந்தை, கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு தற்போது 1,985 காய்கறி கடைகள், 992 பழக்கடைகள், 472 மலர் கடைகள், 492 மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1,000 சரக்கு லாரிகள் இச்சந்தைக்கு வருகின்றன. சந்தைபயன்பாடு மற்றும் எதிர்கால விரிவாக்கத்துக்காக 295 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் மலர், காய், கனி சந்தை 70 ஏக்கரில் மட்டுமே இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில், ஆம்னி பேருந்து நிலையம் போன்றவற்றுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகரில் மக்கள்தொகை அதிகரிப்பால், காய்கறி மற்றும் பழத் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தையில் எப்போதும் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க புறநகர் பகுதிகளில் மேலும் 3 இடங்களில் மொத்த விற்பனை சந்தைகளை திறக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, புறநகர் பகுதி சில்லறை வியாபாரிகளுக்கு மலர், காய், கனி வாங்க முக்கிய சந்தையாக கோயம்பேடு விளங்குகிறது. இந்த சந்தைக்கு வரும் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துவிட்டது. இதனால் கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் கூட்டத்தாலும், போக்குவரத்து நெரிசலாலும் சிக்கித் தவிக்கின்றன.
அதனால் பல்வேறு பகுதிகளில் புதிய மொத்த விற்பனைசந்தைகளை திறக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காக சென்னையில் மணலி அடுத்தமாத்தூர் (30 ஏக்கர்), செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் அடுத்த பொத்தேரி (19 ஏக்கர்), திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் (80 ஏக்கர்) ஆகிய3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சரக்குகளை எளிதில் கொண்டுவர ஏதுவாக இந்த இடங்கள் தேசிய நெடுஞ்சாலையைஒட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சியை கணக்கிட்டு, அதற்கு ஏற்ற வகையில் இந்த மொத்த விற்பனை சந்தைகள் வடிவமைக்கப்பட உள்ளன. மேலும் சந்தையை வடிவமைப்பது, நவீன முறையில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், மழைநீர் வடிகால், ஏலக்கூடம், காய்கறி, பழங்களை வைப்பதற்கான குளிர்பதனக் கூடம் உள்ளிட்டவைஅமைப்பது குறித்து ஆய்வு செய்ய கலந்தாளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் 5 மாதங்களில் ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கை, திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "தற்போது உள்ள நெரிசலைத் தவிர்க்க, இது நல்ல திட்டமாகவே தெரிகிறது. அதே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் வியாபாரமும், வருவாயும் குறைவதை எப்படி ஏற்றுக்கொள்வது என தெரியவில்லை" என்றனர்.