

நாட்றாம்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அரசு சிறப்பு சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 200 பேரில் இதுவரை 135 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவம் சார்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஜூலை 17-ம் தேதி வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.
இங்கு 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாரம்பரிய முறைப்படி உணவு வகைகள், தினந்தோறும் உடற்பயிற்சி, யோகாவுடன் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதால் கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு 5 நாட்கள் சிகிச்சை முடிந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவதாகச் சிறப்பு சித்த மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.விக்ரம்குமார் கூறினார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:
’’நாட்றாம்பள்ளி அரசு சிறப்பு சித்த மருத்துவமனை இயற்கை எழில் சூழ அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மூலிகை கலந்த உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 24 மணி நேரமும் மருத்துவமனை தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 17-ம் தேதி முதல் இதுவரை 200 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளைச் செய்து கொடுத்தால் 5 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இதுவரை 135 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் விரைவில் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம். இங்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர்களுக்கு மருந்துகளுடன் நம் பாரம்பரிய உணவு வகைகள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், கபசுரக் குடிநீருடன், பல வகையான கீரை வகைகள், பச்சை பயிறு, கேழ்வரகு, கம்பு ரொட்டி, தினைப் பாயாசம், கொண்டைக்கடலை ஆகியவை வாரத்துக்கு ஒன்று எனத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம்.
அதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 வடிவிலான நடைமேடையில் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி, யோகா, தியானப்பயிற்சிகள், மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கி வருவதால் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் விரைவில் குணடைந்து வீடு திரும்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பதால் எங்களால் இதை எளிமையாகச் செய்ய முடிகிறது’’ என்றார்.