Last Updated : 27 Aug, 2020 09:21 PM

 

Published : 27 Aug 2020 09:21 PM
Last Updated : 27 Aug 2020 09:21 PM

உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரிக்கு இடைக்கால செயலரை நியமிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி செயலராக தேர்வானவர் மீது ஊழல் வழக்கு இருப்பதால், அவருக்குப் பதிலாக இடைக்கால செயலர் ஒருவரை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி செயலராக தேர்வு செய்யப்பட்டவர் பி.பாண்டியன். இவரை கல்லூரி செயலராக ஓராண்டு காலத்துக்கு அங்கீகரித்து கல்லூரி கல்வி இயக்குனர் 17.6.2020-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பூர்ணசந்திரகலா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கள்ளர் கல்விக் கழகம் நடத்தி வரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி செயலராக பாண்டியன் ஏற்கெனவே 3 ஆண்டுகள் (2015 முதல் 2018 வரை) பதவி வகித்தார்.

அப்போது கல்லூரி பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன.

இது தொடர்பாக வனராஜா என்பவரின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாண்டியன் உட்பட 4 பேர் மீது 2017-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாண்டியன் உட்பட 4 பேர் மீது மதுரை லஞ்ச வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் 13.3.2018-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பாண்டியனின் 3 ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வந்தது. அடுத்த 3 ஆண்டுக்கான கல்லூரியின் புதிய கல்விக் குழுவை தேர்வு செய்வதற்கான தேர்தலில் நடைபெற்றது.

இதில் பாண்டியன் வெற்றிப்பெற்று செயலராக அறிவிக்கப்பட்டார். அவரை கல்லூரி செயலராக அங்கீகரிக்கக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குனரிடம் மனு அளித்தேன். என் மனுவை ஏற்காமல் பாண்டியனை கல்லூரி செயலராக 3.3.2020 முதல் 2.3.2021 வரை செயல்பட அனுமதி வழங்கி கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கல்லூரி செயலராக அங்கீகரிக்கப்பட்டுள்ள பாண்டியன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் அவரை கல்லூரி செயலராக அங்கீகரித்ததை ஏற்க முடியாது. அவர் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து தான் குற்றமற்றவர் என நிரூபித்தால் செயலர் பதவியில் தொடரலாம்.

எனவே உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி செயலராக பாண்டியனை அங்கீகரித்து கல்லூரி கல்வி இயக்குனர் 17.6.2020 அன்று பிறப்பித்த உத்தரவு, மதுரை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாண்டியன் மீதான வழக்கு முடிவுக்கு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த வழக்கிலிருந்து விடுதலையாகும் பட்சத்தில் பாண்டியன் கல்லூரி செயலராக செயல்பட எந்த தடையும் இல்லை. அதுவரை கல்லூரியை நிர்வகிக்க புதிதாக தேர்வு செய்யப்பட்ட கல்விக்குழுவில் இருந்து ஒருவரை இடைக்கால செயலராக நியமிக்க வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யப்படுவர் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவராகவும், எந்த அமைப்பாலும் தண்டிக்கப்படாதவராகவும் இருக்க வேண்டும். அவர் கல்லூரி செயலராக செயல்பட கல்லூரி கல்வி இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x