

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக நத்தத்தில் 70 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் பழநி அருகேயுள்ள வரதமாநதி அணை நிரம்பி வழிந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது மழை பெய்துவந்தபோதும் மாவட்டத்தில் பரவலாக மழை இல்லாதநிலையே காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, மஞ்சளார் அணை, மருதாநதி அணை, ஆத்தூர் நீர்த்தேக்கம் உள்ளிட்டவற்றிற்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பழநி அருகேயுள்ள வரதமாநதி அணை நிரம்பி வழிந்தது.
அணையின் மொத்த நீர்மட்டம் 66.47 அடி. அணைக்கு வரும் கூடுதல் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுவருகிறது. பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 65 அடி. தற்போது 39.91 அடியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வந்துகொண்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை அளவு விபரம்:
திண்டுக்கல் 61.6 மில்லிமீட்டர், கொடைக்கானல் 7 மி.மீ., சத்திரப்பட்டி 10.2, நத்தம் 70, நிலக்கோட்டை 57 மில்லிமீட்டர், வேடசந்தூர் 10.4 மில்லிமீ்ட்டர் பெய்தது. மாவட்டத்தில் மொத்தம் 234.9 மில்லிமீட்டர் மழை அளவு பதிவானது.
மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயபணிகளை தொடங்க விவசாயிகள் ஆர்வம்காட்டிவருகின்றனர்.