

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6, 9, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தலைமையில் இன்று (27.08.2020) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் பேசியதாவது:
“மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு, பல்வேறு IEC நடவடிக்கைகளின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சென்னையில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், தங்கள் தேவைகளுக்காக வெளியே வருகின்ற நிலை அவ்வப்பொழுது காணப்படுகிறது.
எனவே, அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத தனிநபர்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொதுமக்கள் உள்ள இடங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் அந்த நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும்,
மேலும், வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களிலிருந்து தொழில் நிறுவனங்களில் பணிபுரிய சென்னைக்கு வரும் நபர்கள் மற்றும் இ-பாஸ் பெற்று வரும் நபர்களையும் கண்காணித்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் போன்ற பருவமழை கால காய்ச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடுகள்தோறும் சென்று கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரிடமும் வீட்டிற்குள்ளும், சுற்றுப்புறத்திலும் டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்ற ஏடிஸ் கொசுக்கள் உருவாக ஏதுவான நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களின் மேற்புறங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாத வகையில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டுள்ளதை 100 சதவீதம் உறுதி செய்து, அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்”.
இவ்வாறு ஹர்மந்தர் சிங் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், கூடுதல் காவல் ஆணையாளர் தினகரன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாலட்சுமி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் ஆல்பி ஜான் வர்கீஷ், பி.என்.ஸ்ரீதர், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் அரவிந்த், ஆர்.சுதன், எல்.நிர்மல் ராஜ், அமுதவல்லி, வி.விஷ்ணு மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது ஏப்ரல் 1 முதல் ஆகஸ்டு 26 வரை ரூ.1கோடியே 83 லட்சத்து 44 ஆயிரத்து 067 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.