கோவில்பட்டி சுரங்கப்பாதையில் ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைப்பு

கோவில்பட்டி சுரங்கப்பாதையில் ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைப்பு
Updated on
1 min read

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைக்கு ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளங்களை கடக்கும் பகுதியான ரயில் நிலையம் அருகே மற்றும் இலக்குமி ஆலை அருகே உள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது.

இதில், ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழே இருந்து கேட்கள் மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால், இலக்குமி ஆலை அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள கேட்டை மூட அப்பகுதியில் உள்ள இந்திரா நகர், இனாம் மணியாச்சி, ஸ்ரீனிவாச நகர், அத்தை கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு ரயில்வே, மாநில அரசு பங்களிப்பு தொகை ரூ.2.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பிருந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

மேலும், மழைநீர் தேங்கினால், அது வெளியேறும் வகையில், சுரங்கப்பாதையின் அருகே பெரிய கிணறு, தண்ணீர் இறைக்க மோட்டார் ஆகியவையும் அமைக்கப்பட்டன.

ஆனாலும், மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதை வழியாக சென்று வரும் மக்களின் நலன் கருதி மேற்கூரை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.22 லட்சத்தில் சுரங்கப்பாதையின் மீது மேற்கூரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in