

அகில இந்திய அளவில் தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்தியதில் திருநெல்வேலி மாநகராட்சி 159-வது இடத்தைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் மாநில அளவில் 2-வது இடத்தை பெற்றிருக்கிறது. திருச்சி மாநகராட்சி முதலிடத்தை பிடித்திருக்கிறது.
தூய்மை இந்தியா என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு தூய்மை பாரதம் எனும் செயல்முறை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார்.
நாடு முழுவதும் இத் திட்டத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய ஸ்வச் கணக்கெடுப்பு 2020 நடத்தப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 4242 நகரங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தமிழக அளவில் 2-வது இடத்தை திருநெல்வேலி மாநகராட்சி பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி 2780 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், 3360 புள்ளிகளுடன் திருச்சி முதலிடத்தை தமிழக அளவில் பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் திருச்சி 102-வது இடத்தை பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி 159-வது இடத்தில் உள்ளது. தூய்மை பாரதம் திட்ட செயல்பாட்டில் அகில இந்திய அளவில் சிறப்பிடத்தை திருநெல்வேலி பெற்றிருப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
108.65 சதுர கி.மீ. பரப்பளவுள்ள திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, மேலப்பாளையம், தச்சநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் 181488 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 513284 பேர் வசிப்பதாக குடியிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. மாநகராட்சியில் தினமும் 102 டன் மட்கும் குப்பை, 68 மட்காத குப்பை என்று மொத்தம் 170 டன் குப்பைகள் உருவாகின்றன.
மட்காத குப்பையில் 22 டன் குப்பை திடக்கழிவுகளாகும். இந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் 358 நிரந்தர தூய்மை பணியாளர்கள், சுயஉதவி குழுக்கள் மூலம் 744 பேர், 233 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என்று 1335 பேர் தினமும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
குப்பைகளை சேகரிக்க 270 பேட்டரி வாகனங்கள், 13 டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், 2 லாரிகள் என்று பல வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. தள்ளுவண்டிகளிலும் சென்று வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் பெரும்பாலானவை ராமையன்பட்டி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. 102 டன் மக்கும் குப்பைகளில் 35 டன் குப்பைகள் மாநகரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிப்பு கூடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு நுண் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நுண் உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
68 டன் மட்காத குப்பைகளில் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கும், சிமெண்ட் ஆலைகளுக்கு ஊடுஎரிபொருளாகவும் பயன்படுத்த அனுப்பப்படுகிறது. மேலும் மகளிர் சுயஉதவி குழு மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சிறுதுகள்களாக்கப்பட்டு சாலைகள் அமைக்க கிலோவுக்கு ரூ.30-க்கு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் அகில இந்திய அளவில் திருநெல்வேலி சிறப்பிடத்தை பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா கூறும்போது, மாநகராட்சியில் 62 மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகள் தனியார் மூலம் மேலாண்மை செய்யப்படுகின்றன. ஒரு சில மருத்துவ பரிசோதனை கூடங்கள் மற்றும் பல் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் மாநகரில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 198 தனிநபர் கழிப்பறைகள், 29 பொது கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் திறந்தவெளிகளை கழிப்பிடமாக்குவது தடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் கூறியதாவது:
தூய்மை பாரதம் திட்டத்தை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்திலும் தாமாக முன்வந்து செய்முறைப்படுத்திட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகரன் மக்கள், மருத்துவர்கள, சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் என்று அனைவரின் ஒத்துழைப்பால் மாநில அளவில் 2-வது இடத்துக்கு திருநெல்வேலி மாநகராட்சி வந்துள்ளது.
மேற்கொண்டு சுகாதாரத்தை மேம்படுத்தும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறோம். இதனால் வருங்காலத்தில் திருநெல்வேலி மாநகராட்சி நாட்டிலுள்ள முதல் 50 சுத்தமான நகரங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.