

சவாரி கிடைப்பதே அரிதாக உள்ள நிலையில், ஆன்லைனில் அபராதம் விதிப்பதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும், அபராதம் விதிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்றும் திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று மனு அளித்தனர்.
புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைவு பெற்ற ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த மனுவில், "வாகனங்களுக்கு போலீஸார் ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட வாகன ஓட்டிகள் அனைவரையும் போலீஸார் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். வாகன நெருக்கடிமிக்க பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதை விட்டுவிட்டு, வாகனங்களை மடக்கி அபராதம் வசூல் செய்வதிலேயே குறியாக இருப்பதைப் போலீஸார் கைவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாகச் சங்கத் தலைவர் கோபிநாத், இந்து தமிழ் இணையதளத்திடம் கூறியதாவது:
"கரோனா ஊரடங்கால் சுமார் 2 மாதங்கள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மே மாத இறுதியில்தான் கட்டுப்பாடுகளுடன் ஆட்டோவை இயக்க அரசு அனுமதி அளித்தது. இப்போதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆட்டோக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு சவாரி கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால், இப்போதும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில், சீருடை அணிந்தும், ஆட்டோ இயக்கும்போது வைத்திருக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்தும், எந்த விதிமீறலிலும் ஈடுபடாத நிலையிலும் அபராதம் விதித்து செல்போன்களுக்குத் தகவல் வருகிறது. வாகனப் பதிவெண்களைப் போலீஸார் குறித்து வைத்துக் கொண்டு இரக்கமின்றி ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள், சுமை வாகனங்கள் எனப் பல தரப்பு வாகனங்களுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இயங்காத ஆட்டோ மற்றும் ஒரே வாகனத்துக்கு ஒரே நாளில் 2-க்கும் அதிகமான முறையிலும் அபராதம் விதித்து செல்போனுக்குத் தகவல் வருகிறது.
போதிய வருமானம் இல்லாமல் ஏற்கெனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குடும்பத்தைக் காக்கப் போராடி வரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதற்கு உடனடியாகக் காவல் ஆணையர் தடை விதிக்க வேண்டும்".
இவ்வாறு கோபிநாத் கூறினார்.