

கனமழையானது பட்டாம்பூச்சிகளின் வாழ்வியல் சூழலைப் பாதிக்கும் என்பதால் வடகிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்பாக மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும், தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பாகக் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கும் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்கின்றன.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் கால நிலைக்காகவும், உணவுக்காகவும் ஏற்காடு, கொல்லிமலை, பச்சமலை ஆகிய கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வழக்கமாகப் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து வரும்.
இடம்பெயரும் ஒரு பட்டாம்பூச்சி, சுமார் 150 கி.மீ. முதல் 250 கி.மீ. வரை பயணிக்கும். சூரிய ஒளி நன்றாக உள்ள நேரமான காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பெரும்பாலும் இடம்பெயர்வு நடைபெறுகிறது. இரவு நேரங்களில் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிடும். அவ்வாறு இடம்பெயர்ந்து இங்கு வரும் பட்டாம்பூச்சிகள் திரும்பிச் செல்லாது. இவற்றின், அடுத்தடுத்த தலைமுறைப் பட்டாம்பூச்சிகளே ஏப்ரல்-மே மாதங்களில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளுக்கு திரும்பிச் செல்லும். இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைகளை நோக்கி நடப்பாண்டுக்கான இடம்பெயர்வு முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள்.
இது தொடர்பாக இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் (டிஎன்பிஎஸ்) ஒருங்கிணைப்பாளர் அ.பாவேந்தன் கூறும்போது, "கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ‘புளூ டைகர்’, ‘டார்க் புளூ டைகர்’, ‘காமன் குரோ’, ‘டபுள்-பிராண்டட் குரோ’, 'லைம் பட்டர்பிளை’, 'காமன் எமிகிரென்ட்' ஆகிய பட்டாம்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக இடம்பெயர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை நோக்கிச் செல்கின்றன.
நடப்பாண்டு முன்கூட்டியே இடம்பெயர்வு நடைபெறுவதால், வழக்கமாக செப்டம்பர் இறுதியில் நடைபெறும் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வு நடப்பாண்டு இருக்குமா என்பது தெரியவில்லை. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் முன்கூட்டியே இதுபோன்ற இடம்பெயர்வு நடைபெற்றதில்லை. பட்டாம்பூச்சிகள் புறப்படும் கிழக்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடப்பாண்டு முன்கூட்டியே நல்ல மழைப்பொழிவு இருந்ததும் இதற்கு முக்கியக் காரணம்.
எப்படிக் கண்டறிவது?
எப்போதும் இங்கிருக்கும் பட்டாம்பூச்சிகள் ஒரே திசையை நோக்கிப் பயணிக்காது. அவை இருக்குமிடத்துக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள் ஒரே திசையை நோக்கி, நேர்கோட்டில், சீரான வேகத்தில் பயணிக்கும். தரையில் இருந்து 3 மீட்டர் முதல் 15 மீட்டர் உயரத்தில் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி அவை பறந்து செல்லும்.
விபத்தில் உயிரிழப்பு
தற்போது நடைபெற்றுவரும் இடம்பெயர்வின்போது தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டுப் பல பட்டாம்பூச்சிகள் இறந்து வருகின்றன. எனவே, பட்டாம்பூச்சிகள் அதிகம் பறக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்றார் பாவேந்தன்.