

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி அரசுக்கு மத்தியக் குழு தொடர்ந்து தொழில்நுட்ப உதவி தர உள்ளது. அதன் விவரங்களை மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும், புதுச்சேரி அரசுக்கும் தந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவல் தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளது. எனவே கரோனா மேலாண்மைப் பணிகளை மேற்பார்வை செய்ய நிபுணத்துவம் பெற்ற குழுவை அவசரமாக நியமிக்குமாறு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியிருந்தார்.
அதையடுத்து ஜிப்மர் மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் கொண்ட மத்தியக் குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் புதுச்சேரியில் இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டனர். அத்துடன் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரைக் கலந்து ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்தனர். புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க உடனடியாகச் செய்ய வேண்டியது தொடர்பான முக்கிய அறிக்கையை ஆளுநரிடம் இக்குழுவிலுள்ள ஐசிஎம்ஆர் தரப்பு தந்தது.
அதில், ''கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று உறுதியானோரைத் தனிமைப்படுத்துதல், தொடர்புகளின் தடங்களை அறிதல், நோயாளிகளுடன் தொடர்புடையோரைத் தனிமைப்படுத்துதல், மருத்துவமனையில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொற்று விவரங்களை மேலாண்மை செய்தல் ஆகியவை உடன் தேவையாகக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இதை உடனடியாக அமலாக்க வேண்டும். இதன் மூலம் தொற்று குறையும்.
ஒவ்வொரு வழிமுறைக்கும் தனி அதிகாரி என கண்காணிப்புப் பணியில் ஜிப்மர் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் குழு வழிகாட்டும். மத்தியக் குழு முழுவதும் தொடர்ந்து புதுச்சேரி அரசுக்குக் கரோனா கட்டுப்படுத்துதலில் தொழில்நுட்ப உதவி தரும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இக்குழு தனது அறிக்கையைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் தந்துள்ளது. மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கும் குழு தனது அறிக்கையை அனுப்பியது.