

கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் வளர்ச்சி தடைப்பட்டு நின்றுவிட்டது என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் உறுப்பினருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக உறுப்பினருமான அண்ணாமலை, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்டத் தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்தார். அங்கு கட்சியின் நிர்வாகிகள் அவருக்கு வேல் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கடைக்கோடி மனிதனுக்காகப் பாடுபடும் கட்சி பாஜக. காஷ்மீர் விவகாரம், ஜிஎஸ்டி, உள்நாட்டுப் பாதுகாப்பு, நக்சல்கள் ஒழிப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நாட்டின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கோவை பாஜகவின் முக்கியமான களம். 45 வயதுக்குக் கீழ் உள்ள இளைஞர்கள் பாஜகவைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இளைஞர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு திருப்புமுனையாகும். தமிழகத்துக்கு ஒரு மாற்றுப் பாதை தேவைப்படும். அதை பாஜக ஏற்படுத்தும். கட்சித் தலைமை வலியுறுத்தினால் தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தல் பணியாற்றுவேன். பிரச்சாரம் செய்வேன். முந்தைய மத்திய அரசுகள் வெளியிட்ட முதல் இரு கல்விக்கொள்கையில் 2 மொழிகள் இருந்தன. அதிலும் இந்தி கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு இல்லை. 3 மொழிகள் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அது எப்படி இந்தித் திணிப்பு ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பிரதமர், தான் செல்லும் இடங்களில் எல்லாம், தமிழின் தொன்மையை முதன்மைப்படுத்துகிறார். நீட் தேர்வைக் கட்டாயம் நடத்த வேண்டும் எனக் கல்வி வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள மற்றும் கர்நாடக அரசுகள், கரோனா காலத்திலும் நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. நீட் தேர்வு வேண்டாம் என பிற மாநிலங்கள் கூறவில்லை. அதற்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தித் தர அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கவில்லை. பொருளாதாரத்தைச் சரியாகக் கையாள்வதில், திராவிடக் கட்சிகள் தவறிவிட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்காக திராவிடக் கட்சிகள் செய்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும். தமிழகத்தில் பாஜக ஒரு புதுப்பாதையை உருவாக்கும். கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் வளர்ச்சி தடைப்பட்டு நின்றுவிட்டது.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை முழுமையாக ஆராயாமல், எதிர்ப்பது தவறான போக்காகும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிதி விவகாரங்களைக் கையாள்வது சரியானதாகவும், வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்கும். இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் கூறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதேசமயம், ஒரு சில மத்திய அரசு அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் செய்யும் செயல் மத்திய அரசின் கருத்து, பிரதமரின் கருத்து எனத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. தூய்மையான கருத்துகளுக்கு எப்போதும் பதில் தரலாம்.''
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.