Published : 27 Aug 2020 05:28 PM
Last Updated : 27 Aug 2020 05:28 PM

அருந்ததியினர் சமூகத்துக்கு 3% உள் ஒதுக்கீடு: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும், மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை பாமக, மார்க்சிஸ்ட், விசிக, தி.க, கொ.ம.க உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பட்டியலின ஒதுக்கீட்டில் 3% உள் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி கடந்த 2015-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான காணொலி அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களுக்கு உண்மையான சமூக நீதி வழங்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டிலேயே வன்னியர் சங்கமும் அருந்ததியர் சங்கமும் இணைந்து ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியதுடன், அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 6% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானமும் இயற்றப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், எந்த ஒரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறியிருக்கிறது. இது சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பாகும். மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களும் உள் ஒதுக்கீட்டின் மூலம் முழுமையான சமூக நீதியைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு பெரிதும் உதவும். உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை பாமக பாராட்டுகிறது; போற்றுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் 25,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்பேரணியின்போதே அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைக் கொள்கை ரீதியாக ஏற்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு, 2009ம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கினை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் உள் ஒதுக்கீடு செல்லும் எனவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வழக்கில் இப்போது கிடைத்துள்ள வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனச் சுட்டிக்காட்டுகிறோம். இந்த வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

விசிக தலைவர் திருமாவளவன்:

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இன்று அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏதுமில்லை. இதனை விசிக சார்பில் வரவேற்கிறோம்.

இது இறுதித் தீர்ப்பாக இல்லை. கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட விரிவான அமர்வுக்கு வழக்கை அனுப்பத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

இந்தத் தீர்ப்பை வழங்கும்போது ‘இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கென செய்யப்பட்ட உள் ஒதுக்கீடு (தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம்) தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு இன்று (27.8.2020) காலை அளித்துள்ள தீர்ப்பில், இதுபற்றி அந்தந்த மாநிலங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்; இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருக்கும்போது, அதன் பயன்களை நீட்டிக்கும் வகையில், உள் ஒதுக்கீடு செய்யும் உரிமையும் மாநிலங்களுக்கு உண்டு என்று அளித்துள்ள தீர்ப்பை வெகுவாக வரவேற்கிறோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா:

விளிம்பில் வாழும் அருந்ததியின மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கலைஞர் அரசு 2009-ல் வழங்கியது. இது தொடர்பாகக் கலைஞர் அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குகொண்டு அருந்ததியின மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக நான் உரையாற்றினேன்.

கடந்த 14-வது சட்டப்பேரவையில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்டுள்ள தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி பலமுறை எடுத்த முயற்சிகளுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்புகளை மனிதநேய மக்கள் கட்சி பதிவு செய்தது.

ஒரு மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு அளிக்க அதிகாரம் உண்டு என்று இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கலைஞர் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்பதை மெய்ப்பித்துள்ளது. இது சமூக நீதியை வலுப்படுத்தும் தீர்ப்பாகும்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்:

தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு அருந்ததியர் சமூகத்திற்கு வழங்க மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு 6 சதவீதமாக கொடுத்தால்தான் விளிம்பு நிலையில் இருக்கின்ற அருந்ததியர் சமுதாயத்தை முன்னேற்ற முடியும்.

அருந்ததியர்களுடைய தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு தமிழக அரசு அருந்ததிய சமுதாயத்தின் கடந்த 10 ஆண்டு கோரிக்கையான 6 சதவீத உள் இட ஒதுக்கீட்டைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். பின்தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர் சமூகத்தை முன்னேற்ற உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மனதார வரவேற்கிறது.

இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x