மதுரையைச் சுற்றிலும் முழுவட்ட வடிவில் ரயில்பாதை அமைக்கப்படுமா?- தென் தமிழகத்தை தூக்கிப்பிடிக்க உதவும் புதுமை ரயில்வே திட்டம்

மதுரையைச் சுற்றிலும் முழுவட்ட வடிவில் ரயில்பாதை அமைக்கப்படுமா?- தென் தமிழகத்தை தூக்கிப்பிடிக்க உதவும் புதுமை ரயில்வே திட்டம்
Updated on
2 min read

தென் தமிழகத்தின் தலைநகராகத் திகழும் மதுரையை தற்போது தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தென் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அதுபோல் பஸ்போர்ட் திட்டமும் விரைவில் வரவிருக்கிறது. அதனால், பழமையான நகரம், பண்பாட்டு தலைநகரம் என்பதைத் தாண்டி மதுரை தற்போது மருத்துவத் தலைநகராக உயர்ந்து நிற்கப்போகிறது.

இத்தகைய நகரில், சாலை வசதி ஓரளவுக்கு இருந்தாலும் சென்னையைப் போல் உள்ளூர் மக்களுக்கான எலக்ட்ரிக் ரயில், மெட்ரோ ரயில் சேவை இங்கு இல்லை. மெட்ரோ ரயில்வே திட்டம் சென்னை, கோவை, மதுரைக்கும் சேர்த்துதான் அறிவிக்கப்பட்டது. சென்னையில் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வந்தது. கோவையில் அதற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் நடக்கிறது.

ஆனால், மதுரையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இடமே இல்லை என்று கைவிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சென்னையை போல் மதுரையில் மெட்ரோ ரயில்சேவை, எலக்ட்ரிக் சேவை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக அதற்கான சாதக அம்சங்களை குறிப்பிடுகிறார் பணி நிறைவு பெற்ற நெடுஞ்சாலை துறையின் தலைமை பொறியாளர் (திட்டங்கள்) ஏ.கே.ராஜதுரை வேல் பாண்டியன்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

மதுரையின் வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக இருப்பதே அதன் உள்ளூர் போக்குவரத்து நெரிசல்தான். பழைய மதுரையை மையமாகக் கொண்டே ஒட்டுமொத்த வர்த்தகமும், போக்குவரத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மிகக் குறுகலான சாலைகளில் ஆக்கிரமிப்புகளுக்கு நடுவில் பயணிக்கும் மக்களும், மதுரை வரும் வணிகர்களும், சுற்றுலாப்பயணிகளும் நகரச்சாலைகளை கடந்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது.

சென்னை, கோவை போல் விசாலமான சாலை போக்குவரத்திற்கு வாய்ப்பே இல்லாத நிலைதான் மதுரையில் உள்ளது. ஆனால், சென்னையைப் போல் மதுரையைச் சுற்றிலும் முழு வட்டவடிவில் ரயில் சேவையை தொடங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் அரைவட்ட அளவிற்கு ஏற்கெவே இருக்கின்றன.

மீதமுள்ள அரைவட்ட அளவிற்கு ரயில்வே பாதைகளை உருவாக்கி மதுரையைச் சுற்றிலும் அன்டை மாவட்டங்களை ஓட்டி முழு வட்டவடிவத்திற்கு ரயில்வே பாதை கட்டமைப்புகளை உருவாக்கி ரயில்சேவை தொடங்கினால் மதுரை மட்டுமில்லாது, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட அன்டை மாவட்ட மக்களும், மதுரைக்கு வர சாலை போக்குவரத்திற்கு மாற்றாக ரயில் சேவையைப் பயன்படுத்த வசதிகளை ஏற்படுத்தலாம்.

தற்போது மதுரை மாவட்டத்தை சுற்றி ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை வரை அரை சுற்றாக ரயில்வே பாதை 128கி மீ அளவு தூரத்துக்கு அமைந்துள்ளது. ஆனால், நேரடியாக ஒரே ரயிலில் இந்த பகுதிகளில் இருந்து சிவகங்கைக்கு நேரடியாக ரயில் வசதி இல்லை.

மீதமுள்ள அரைவட்டமான ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் டி. கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோயில், மேலூர் வழியாக சிவகங்கை வரை சுமார் 187கி.மீ நீளத்துக்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். இந்த 187 கி.மீ., தொலைவிற்கு இரண்டு திட்டங்களாக புதிய ரயில்வே பாதையை நிறைவேற்றலாம்.

திட்டம் 1ல், ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் உசிலம்பட்டி (66கி.மீ), உசிலம்பட்டி முதல் சோழவந்தான் (33கிமீ) மொத்தம் 99 கி.மீ. ரயில்வேபாதை அமைக்க வேண்டும். இதில், சோழவந்தானில் ரயில் நிலையம் உள்ளது. திட்டம் 2ல் சோழவந்தான் முதல் பாலமேடு( 27கிமீ.), பாலமேடு முதல் அழகர்கோயில் (33கி.மீ.,), மேலூர் முதல் சிவகங்கை (28கி.மீ.) மொத்தம் 88 கி.மீ., தொலைவிற்கு ரயில்பாதை அமைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்து எளிதாகும். விவசாயப் பொருட்களைக் குறைந்த செலவில் விவசாயிகள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் கொண்டுசெல்ல ஏதுவாகும். நகருக்குள் போக்குவரத்து குறையும். மதுரை, அதன் அன்டை மாவட்டங்களின் பெரும்பகுதி வறட்சியின் பிடியில் இருப்பதால் இந்த திட்டம் அமைந்தால் அதன் தொழில்துறை வளர்ச்சிக்கும், இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கும் உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்மீக ஸ்தலங்களை இணைக்கலாம்:

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், அழகர்கோயில், மதுரை மீனாட்சியம்ன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் போன்ற சிறப்பு மிகுந்த ஆன்மீக ஸ்தலங்களை, இந்த புதிய ரயில் திட்டத்தால் நேரடியாக இணைக்கலாம். இந்தியாவின் தென்பகுதிக்கு வடஇந்திய பகுதி மக்கள், பக்தர்களாகவும், சுற்றுலாப்பயணிகளாகவும் மதுரைக்கும், ராமேஸ்வரதிற்கும், கன்னியாகுமரிக்கும், கொடைக்கானலுக்கும் வருவதில் உள்ள சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

எனவே மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி சர்வே பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதை உள்ளூர் அமைச்சர்கள், எம்பி மற்றும் மற்ற மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்த வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in