

பெங்களூருவில் இருந்து வேலூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேலூரில் அதிக அளவில் விற்பனை செய்யப் படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேலூர் டிஎஸ்பி திரு நாவுக்கரசு தலைமையில், காவல் துறை ஆய்வாளர்கள் கருணாகரன் (தாலுகா), செந்தில்குமார் (வடக்கு) மற்றும் காவல் துறையினர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தனிப்படை காவல் துறையினர் வேலூர் அடுத்த செதுவாலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த 2 வேன்களை தனிப்படையினர் மடக்கி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக், மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என தெரிய வந்துள்ளது. வேனில் இருந்த 5 பேரிடம் நடத்திய விசா ரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்படும் குட்கா பொருட்கள் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று அங்குள்ள பெட்டிக்கடை, தேநீர்க்கடை, பீடா கடைகளில் விற்பனை செய்யப் பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தனிப்படை காவல் துறையினர் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 2 வேன்களை பறிமுதல் செய்தனர்.