

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், நேற்று பிற்பகலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அம்பாசமுத்திரத்தில் 1 மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு, சிங்கம் பட்டி பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. அயன்சிங்கம் பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத் தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக் கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித் தனர்.
திருநெல்வேலி மாநகரில் அரைமணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. பாளையங்கோட்டை சமாதானபுரம், வண்ணார்பேட்டை, புரம் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
திருநெல்வேலியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 6 மி.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 2 மி.மீ., களக்காட்டில் 14.2 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 102.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டிருந்தது.