விவசாயிகளுக்கான திட்டங்களில் முறைகேடுகளை தடுக்க நிலவுடமைப் பதிவேடுகளை புதுப்பிப்பதே தீர்வு: அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்

விவசாயிகளுக்கான திட்டங்களில் முறைகேடுகளை தடுக்க நிலவுடமைப் பதிவேடுகளை புதுப்பிப்பதே தீர்வு: அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
Updated on
1 min read

விவசாயிகளுக்கான திட்டங்களில் நடைபெறும் முறைகேட்டைத் தடுக்கவும், அரசு நலத்திட்டங்கள் உண்மையான விவசாயிகளைச் சென்றடையவும் 36 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் நிலவுடமைப் பதிவேடுகளை மறுவகைப்பாடு செய்து அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதே ஒரே தீர்வாகும் என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தில் 1984-க்குப்பிறகு நிலவுடமைப் பதிவேடுகள் மறுவகைப்படுத்தப்படவில்லை. மாநிலத்தில் 1.25 கோடி விவசாய குடும்பங்கள் உள்ளன என்றும் 48 லட்சம் ஹெக்டேர் புஞ்சை, நஞ்சை நிலங்கள் (சமதள விளைநிலப் பகுதி) இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 40 சதவீதம் நிலங்கள் கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்குச் சொந்தமானவை.

6 மாதங்கள் பாதிப்பு

தமிழகம் 2 பருவமழைகளை நம்பியிருக்கிறது. இக்காலக்கட்டங்களில் சுமார் 6 மாதங்கள் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இயற்கைப் பேரிடரின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு, கடந்த 36 ஆண்டுகளாக நிலவுடமைப் பதிவேடு புதுப்பிக்கப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் அல்லாதோர் சுமார் 25 ஆயிரம்பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரில், அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோல, மாநிலம் முழுவதும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. அரசே இணையதள பதிவேட்டைச் செய்திருந்தால் முறைகேடு நடந்திருக்காது. அந்தப் பணியைதனியாரும் செய்ய அனுமதித்ததால் விவசாயிகள் அல்லாதோரும் பதிவேற்றம் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.

தமிழகத்தில், 1984-ம் ஆண்டுக்குப் பிறகு நிலவுடமைப் பதிவேடு மறுவகைப்பாடு செய்யப்படாததால் ஆதார் கார்டுக்கு இணையான கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படவில்லை. வருவாய்த் துறையும் கூட்டுறவுத் துறையும் நிலவுடமைப் பதிவேட்டை புதுப்பித்தால் மட்டுமே அரசுத் திட்டங்களால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவர். கிராமங்களில் நடைபெறும் ஜமாபந்தியும் சடங்குக்காக நடத்தப்படுகிறது. அதில், யார் யார் நிலத்தில் என்ன பயிரிடப்பட்டுள்ளது என்ற ஒத்திசைவு செய்யப்படுவதில்லை.

அதனால் குத்தகை விவசாயிகளின் குத்தகை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 1984-க்குப் பிறகு நிலவுடமைப் பதிவேடு மறுவகைப்பாடு செய்யாததால், அன்றைய நிலையே இப்போதும் நீடிக்கிறது. இதனால் சுமார் 60 லட்சம் விவசாய குடும்பங்கள் விடுபட்டுள்ளன.

இணையதள செயல்பாடு

எனவே, நிலவுடமைப் பதிவேட்டை புதுப்பித்து அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். வேளாண்மை, கூட்டுறவுத் துறைகளை முழுமையாக இணையதள செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும், உண்மையான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். டி.செல்வகுமார்


அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in