Published : 27 Aug 2020 07:44 AM
Last Updated : 27 Aug 2020 07:44 AM

கரோனா பரிசோதனையில் தனியார் மருத்துவமனைகள் மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார்: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

கரோனா பரிசோதனையில் தனியார் மருத்துவமனைகள் மோசடிசெய்வதாக வந்த பொதுமக்களின்புகாரின் அடிப்படையில், நேற்று தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்டால் தொற்று இருப்பதாகவே ஆய்வு முடிவு வருகிறது என்றும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் உடனடியாக ஓர் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் தனியார்மருத்துவமனையில், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாதிடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இம்மருத்துவமனையில் அரசு விதிமுறை சரியாக பின்பற்றப்படுகிறதா, கரோனா பாதித்தோருக்கு படுக்கை வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா, மருத்துவமனை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா, ஆய்வு முடிவுகள் சரியாக இருக்கின்றனவா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளான சுடர், தீபம் மருத்துவமனைகள் மற்றும் ஐடெக் ஆய்வகம், குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனை, கவிதா நர்சிங் ஹோம் உள்ளிட்ட மருத்துவ இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா, தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாம்பரம் வட்டாட்சியர் சரவணன், தாம்பரம் சுகாதார அலுவலர் மொய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரோனா பரிசோதனையில் மோசடி நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள தனியார்மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ள குழுஅமைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று முதல்கட்டமாக தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றஇடங்களிலும் ஆய்வுகள் தொடரும். ஆய்வில் மோசடி நடைபெற்றிருப்பது உறுதியானால் உரிமம் ரத்து செய்து `சீல்’ வைக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x