Published : 27 Aug 2020 07:41 AM
Last Updated : 27 Aug 2020 07:41 AM

கடன்களுக்கான அபராத வட்டி கோருவதை கைவிட வேண்டும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கோரிக்கை

அதிமுக அரசு தொட்ட இடமெல்லாம் ஊழலாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ.7,500 மாநில அரசு ரூ.5,000 என ரூ.12,500 நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய அரசு உணவுக் கிடங்குகளில் உள்ள 10 லட்சம் டன் உணவு தானியத்தை எடுத்து நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், மின் கட்டணத்தை மக்கள் தலையில் சுமத்தாமல் கேரள அரசை போல் 50 சதவீத கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இன்று தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தியா முழுவதும் பிரச்சாரம் தொடங்கியது. தமிழகத்தில் 10 ஆயிரம் மையங்களில் பிரச்சார இயக்கம் தொடங்கி நடந்து வந்தது. இந்தப் பிரச்சாரத்தின் நிறைவாக இன்று தமிழகத்தில் 10 ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக பல்லாவரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை அறிவித்தது. அதில் பெரும் பகுதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுத்தது.

ஊரடங்கு நெருக்கடியை பயன்படுத்தி புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், வேலை நேரம் அதிகரிப்பு, பொதுத் துறை மற்றும் கனிம வளங்களை தனியார்மயமாக்கி வருகிறது. நீட் போன்ற தேர்வுகளை வைத்து மாணவர்களின் கல்வியோடு அரசு விளையாடுகிறது. மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு உருப்படியான ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை என தனதுபொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது. மாநில அரசு, முகக்கவசம், வெண்டிலேட்டர் வாங்குவது, நோயாளிகளுக்கு உணவு வழங்குவது என அனைத்திலும் ஊழல் செய்கிறது. அதிமுக அரசு தொட்ட இடமெல்லாம் ஊழலாக உள்ளது. கரோனா வைரஸை விட கொடியவர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

பல்வேறு வகையான கடன்களுக்கான தவணைத்தொகை வசூலிப்பதையும், அபராத வட்டி கோருவதையும் கைவிட வேண்டும். அனைத்து தவணை வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x