

கோவையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது இருசக்கர நண்பர்களுடன் சென்ற சிறுவனை துரத்திப் பிடித்த போலீஸ் ஏட்டு சிறுவனை கடுமையாக தாக்கிய விவகாரம் புகாரானது. இதுகுறித்து 3 வாரங்களில் பதிலளிக்க கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக ஊரடங்கு தொடர்கிறது. இந்நிலையில் கடைசி 6 வது, 7 வது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்று மருத்துவ காரணம் தவிர்த்து வேறு எதற்கும் வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது, கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லையில் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது மூன்று பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்துள்ளனர். இதைப்பார்த்த போலீஸார் அவர்களை துரத்தியுள்ளனர். போலீஸாரிடம் சிக்காமல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர்கள் செல்ல இடையில் தங்களுடன் வந்த 13 வயது சிறுவனை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
சாலையில் நடந்துச் சென்ற 13 வயது சிறுவனை பிடித்த தலைமை காவலர் துர்காராஜ், சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டு ரத்த காயத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, தலைமை காவலர் துர்காராஜ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு (suo-motu) எடுத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே டிபன் கடை வைத்திருந்த தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட போலீஸாரை படம் பிடித்த சிறுவனை காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாக்கிய விவகாரத்தில் கோவை போலீஸாருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.