கோவை விமான நிலையத்தில் தம்பதியிடமிருந்து ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்தது கண்டுபிடிப்பு

கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பேஸ்ட் வடிவிலான தங்கம்.
கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பேஸ்ட் வடிவிலான தங்கம்.
Updated on
1 min read

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தம்பதியிடம் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கடந்த 10-ம் தேதி கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குனர் ஜி.சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதற்றத்துடன் காணப்பட்ட திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த 46 மற்றும் 33 வயதுடைய தம்பதியைத் தனியே அழைத்துச் சோதனை செய்தனர்.

சோதனையில் இருவரும் தங்களது உள்ளாடைகளில் 2.16 கிலோ எடையுள்ள ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கத்தை 6 பாக்கெட்டுகளில் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் கூறும்போது, "விமான நிலையத்தில் நடைபெறும் மெட்டல் டிடெக்டர், எக்ஸ்-ரே சோதனைகளில் கண்டறிய முடியாத வகையில், தங்கத்தை உருக்கி பேப்பரில் பேஸ்ட் ஆக இட்டு, அதை உள்ளாடைகளில் தைத்து எடுத்து வந்துள்ளனர். பேஸ்ட் வகையில் கோவை விமான நிலையத்துக்குத் தங்கத்தைக் கடத்தி வந்தது இதுவே முதல் முறையாகும். தங்கத்தைக் கடத்தி வந்த தம்பதியினர் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் முடிந்தபிறகு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏமாற வேண்டாம்

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்ற இந்தத் தம்பதியினர், கரோனா காரணமாகத் திரும்பி வர முடியாமல், கையிலிருந்த பணத்தை முழுமையாகச் செலவு செய்து, பணம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது சிலர், தங்கத்தை எடுத்துச் சென்றால் பணம் தருவதாகவும், இந்தியா திரும்பும்வரை தங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, வேறு வழியில்லாமல் தங்கத்தைக் கடத்தி வர தம்பதியினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானம் என்பதால் சோதனை இருக்காது என்று கடத்தலில் ஈடுபட ஒப்புக்கொண்டுள்ளனர். கரோனா காரணமாக வேலை இழந்த நபர்களைக் குறிவைத்து தங்கக் கடத்தல் கும்பல் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. எனவே, இதுபோன்ற விமானங்களில் சோதனைக் குறைவு என்ற தவறான தகவலை நம்பி இந்தக் கும்பலிடம் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in