Published : 26 Aug 2020 05:48 PM
Last Updated : 26 Aug 2020 05:48 PM

ஊரடங்கு காலத்தில் 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கும் வட்டி விதிப்பதா?- தமாகா யுவராஜா கேள்வி 

ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்துவதிலிருந்து சலுகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அப்படியெனில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது என்பது சலுகை அளிப்பதை அர்த்தமில்லாததாக்கிவிடும். சலுகை அளிப்பது என முடிவு செய்துவிட்டால், அது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''வங்கிக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் மேல் பழிபோடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால்தான் இந்தப் பிரச்சினையே ஏற்பட்டது. வட்டிக்கு வட்டி வசூல் ரிசர்வ் வங்கியின் முடிவு எனக்கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது'' என்று கூறியுள்ளனர்.

கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பலரது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பலர் பணி இழந்தும் பலர் ஊதிய வெட்டுக்கும் ஆளாகி துயருற்று வருகின்றனர். இவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணைத் தொகையை 6 மாதங்கள் கழித்துச் செலுத்தலாம் என்னும் ஆணை மிகவும் நிம்மதியை அளித்தது. கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தாத இந்த காலம் சிபிலில் சேர்க்கப்படாது எனவும் கூறப்பட்டது. ஆனால், அந்த நிம்மதிக்கும் தற்போது ஒரு சில பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும், சில தனியார் நிதி நிறுவனங்கள் வேட்டு வைத்துள்ளன.

ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்துவதிலிருந்து சலுகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அப்படியெனில் வட்டிக்கு வட்டி வசூலிப்பது என்பது சலுகை அளிப்பதை அர்த்தமில்லாததாக்கிவிடும். சலுகை அளிப்பது என முடிவு செய்துவிட்டால், அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். உங்களது பணியைச் செய்யும் நேரம் இதுவல்ல. வணிக நலனில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் தேவையான நிவாரணத்தை வழங்குவது அவசியம். மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு அனைத்து உரிமைகளையும் வங்கிகளிடமே விடாமல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறும் முன்பு அரசு தாமாகவே முன்வந்தது ஊரடங்கின் போது கடினமான நேரங்களை எதிர்கொண்ட கடன் வாங்கியவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்று தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x