

நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் பெய்த அதி கனமழையால் மின் உற்பத்திக்கு உதவும் அணைகளில் 90 சதவீத அளவுக்குத் தண்ணீர் இருப்பில் உள்ளது. குந்தா மற்றும் கெத்தை அணைகளில் சகதி தேங்கியுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயார், சிங்காரா, பார்சன்ஸ் வேலி, காட்டுக்குப்பை உள்பட 12 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். நிகழாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பொழியாததால் அணைகள் நிரம்பவில்லை. ஏற்கெனவே அணைகளில் இருப்பில் உள்ள நீரும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சரி வர பெய்யாததால் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 5 நாட்களில் 87% கூடுதல் மழை பெய்ததால், மின் உற்பத்திக்கு உதவும் அணைகளில் 90 சதவீத அளவுக்குத் தண்ணீர் இருப்பில் உள்ளது. இதனால், மின் உற்பத்திக்குப் பிரச்சினை இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறும் போது, "கரோனா காலத்தால் பொது முடக்கம் காரணமாக மின் தேவை குறைந்திருந்தது. தற்போது, பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனால், மின் தேவை அதிகரித்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், இம்மாதம் 5 நாட்கள் கனமழை பெய்ததால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால், மின் உற்பத்திக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது" என்றனர்.
சகதியால் சிக்கல்
குந்தா, கெத்தை அணைகளில் தேங்கியுள்ள சேறு, சகதியை அகற்றாததால் தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.
மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பதால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள செடி, கொடிகள், மரங்கள் அணைகளில் தேங்கியுள்ளன. இதனால், மேற்படி அணைகளில் 50 சதவீதத்துக்கு மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளன. இதனால் குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகின்றன. மேலும், சேறு, சகதியால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
அணைகள் – நீர் இருப்பு
முக்கூர்த்தி - 16 அடி (18)
பைக்காரா – 85.5 அடி (100)
சாண்டிநல்லா - 39 அடி (49)
கிளன்மார்கன் - 28 அடி (33)
மாயார் - 16 அடி (17)
அப்பர் பவானி - 185 அடி (210)
பார்சன்ஸ் வேலி - 51 அடி (58)
போர்த்திமந்து - 111 அடி (130)
அவலாஞ்சி - 163 அடி (171)
எமரால்டு - 168 அடி (184)
குந்தா - 8 அடி (89)
கெத்தை - 152 அடி (156)