Published : 26 Aug 2020 04:56 PM
Last Updated : 26 Aug 2020 04:56 PM

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி; சென்னையில் 300 பேருக்குச் செலுத்தி சோதனை: தமிழக அரசு முடிவு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கரோனா கோவிஷீல்டு தடுப்பூசியை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக அரசு, கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Remdesivir, Tocilizumab, Enoxaparin போன்ற உயிர் காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மனித குலத்தை கரோனா நோய்த்தொற்று தாக்குதலிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. பல்வேறு நாடுகள் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இங்கிலாந்தைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து இந்தத் தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்குச் செலுத்தி நோய் எதிர்ப்புத் திறனைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தடுப்பூசி கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக அமையும் என்பது உலக அளவில் மருத்துவ நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய அளவில், தடுப்பூசியைச் சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) சென்னையைத் தெரிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து மேற்கொள்ளும்.

சென்னையைப் பொறுத்தவரையில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்தத் தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். மேலும், 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலில் உருவாக்கிவிடும்.

இரண்டாம் கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும். முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் கரோனா தடுப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x