

சங்கரன்கோவில் அருகே ரேஷன் கடையை திறக்கக் கோரி பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன.
இந்த கிராம மக்கள் ரேஷன் பொருட்களை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொச்சிகுளம் கிராமத்துக்குச் சென்று வாங்கி வருகின்றனர்.
ரேஷன் கடைக்குச் சென்று வருவதில் மிகுந்த சிரமம் உள்ளதால், தங்கள் கிராமத்தில் ரேஷக் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2007-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பொது நிதியில் இருந்து புதிதாக ரேஷக் கடை கட்டி, திறக்கப்பட்டது.
இருப்பினும் இங்கு ரேஷன் கடை கொண்டுவரப்படவில்லை. இது தொடர்பாக பல முறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக கட்டிடம் திறக்கப்படாமல் இருந்ததால் பழுதடையத் தொடங்கியது. இதனால், பொதுமக்கள் தாமாக முன்வந்து, நன்கொடை வசூலித்து, கட்டிடத்தை பழுது பார்த்தனர்.
தங்கள் ஊரில் ரேஷன் கடை திறக்காததால், கடந்த 2 மாதமாக நொச்சிகுளத்துக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதை புறக்கணித்தனர்.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ரேஷன் கடை கொண்டுவரக் கோரி இன்று வடக்கு ஆலங்குளம் கிராம மக்கள் திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடை முன்பு கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு, ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி கோஷமிட்டனர். ரேஷன் கடையை திறக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.