கூட்டம் அலைமோதியதால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது: நெல்லையில் செல்போன் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

கூட்டம் அலைமோதியதால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது: நெல்லையில் செல்போன் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
Updated on
1 min read

திருநெல்வேலி சந்திப்பில் செல்போன் கடையில் கூட்டம் அலைமோதியதால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது. இது குறித்த புகாரின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே தனியார் செல்போன் கடை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்க விழாவை முன்னிட்டு 6 நாட்களுக்கு ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாஸ் தலா 6 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

மேலும் தினமும் முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றும், செல்போன் எண்ணைp பதிவு செய்ய வேண்டும் என்றும் 6 தினங்களுக்கு மட்டும் 600 பேருக்கு விற்பனை செய்யபடுவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து இன்று அந்த கடையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலையும்மீறி சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர்.

இது குறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் அங்கு சென்று, கரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் அதிக அளவு கூட்டத்தை கூட்டியதற்காகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததற்காக கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கடையை மூடி சீல் வைத்தனர். வரும் 1-ம் தேதி வரை கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு நோட்டீஸையும் கடையில் மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in