

அரசு மானியத்தில் வழங்கும் உரங்கள் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ரசாயன உரங்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடி விவசாயத்திற்கு மட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலவை உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான மூலப்பொருளாக உரங்களைப் பயன்படுத்தலாம்.
வேளாண்மை ஆணையரகத்தில் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மட்டுமே, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்ல முடியும். இந்நிலையில் அரசு மானியத்தில் வழங்கப்படும் உரங்களை வெளி மாநிலங்களுக்குக் கடத்திச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்துக் கோவை வேளாண்மை துணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி கூறியதாவது:
''கோவை மாவட்டத்தில் காரீஃப் பருவச் சாகுபடிக்குப் போதிய அளவு மழை பெய்த நிலையில், முக்கிய ரசாயன உரங்களான யூரியா 3,950 டன், டிஏபி 2,950 டன், பொட்டாஷ் 4,310 டன், காம்ப்ளக்ஸ் 8 ஆயிரம் டன் என்ற அளவில் மாவட்டம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்பருவத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், பயறு வகைப் பயிர்கள், எண்ணெய் வித்துப்பயிர்கள், கரும்பு, காய்கறி மற்றும் வாழை சாகுபடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உரங்கள் சீராகக் கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றம் தனியார் உர விற்பனை மையங்கள் வட்டார உர ஆய்வாளர்கள் மூலமாக தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மானிய உரங்களை விவசாயம் மற்றும் உரங்கள் தயாரிப்பதைத் தவிர மற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். வேளாண்மைத் துறை இயக்குநரிடம் இருந்து மாத வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உரங்களைத் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கடத்திச் சென்றால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995-ல் இடமுள்ளது.
மேலும், உர விற்பனையாளர்கள் உரிமம் பெறாமல் உரம் விற்பனை செய்வது, உரிமம் இல்லாத குடோன்களில் உரம் இருப்பு வைப்பது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பது, விற்பனைக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருப்பது, பதிவேடுகள், விற்பனைக் கருவிகளில் இருப்பைச் சரிவரப் பராமரிக்காமல் இருப்பது போன்றவையும் உரத் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இத்தகையச் செயல்களில் ஈடுபடுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, உர விற்பனை நிலையங்களில் விற்பனைக் கருவிகள் மூலமாக மட்டுமே உரங்களை வாங்க வேண்டும்''.
இவ்வாறு சித்ராதேவி கூறினார்.