

சேலம் மாநகரத்தில் முதல் முறையாக ‘நம்பிக்கை’ எனும் பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கப்பட்டிருக்கிறது.
சேலத்தில் இயங்கிவரும் ‘நம்பிக்கை வாசல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு தனது 8-வது ஆண்டு தொடக்க விழாவை இன்று நடத்தியது. இந்த நிகழ்வில், சேலத்தில் வசிக்கும் ஆறு மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து, தங்களுக்கான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஒரு சுய உதவிக்குழுவைத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், “மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ஆவின் பால் பூத், தையல் மெஷின், சக்கர நாற்காலி, கடனுதவி மானியங்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் இணையதளத்திலேயே விண்ணப்பிக்கும் வசதிகள் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும்” என்றார்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் சேலம் சிட்டி கிளையின் மேலாளர் ரகுநாதன் பேசுகையில், “மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் சமுதாயத்தில் ஒரு பகுதியாக வாழ்பவர்கள். அவர்களும் வாழ்க்கையில் உயர்வடைய நாம் வழிகாட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
ஏற்புரை நிகழ்த்திய ‘நம்பிக்கை வாசல்’ டிரஸ்டின் தலைவர் ஏகலைவன் பேசும்போது, “சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஆறு பேரை ஒருங்கிணைத்து இந்த சுய உதவிக்குழுவை உருவாக்கியிருக்கிறோம். இந்தக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைய வழிவகை செய்யவும் உறுதி பூண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 3 அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதோடு, இந்த அமைப்பின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழின் சிறப்பிதழும் வெளியிடப்பட்டது. நம்பிக்கை வாசல் டிரஸ்ட், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனது அலுவலகத்தில் இலவச ட்யூஷன் சென்டர் நடத்திவருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஏகலைவன், “என் அப்பா தெருவோர சிறு வியாபாரி. எனது 13 வயதில் சென்னை தாம்பரத்தில் ரயிலில் அடிபட்டு மயக்கமடைந்து கிடந்தேன். பல மணிநேரம் கழித்தே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றினர். என் பிறந்த நாளன்று நண்பர்களைப் பார்க்கச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் எனது காலை இழந்தாலும் மனதில் நம்பிக்கையை இழக்கவில்லை. அதுதான் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிக்க வைத்தது. நூல்கள் எழுத வைத்தது. இப்படியொரு ட்ரஸ்ட் ஏற்படுத்தி ஏழைப் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வைக்கிறது.
கரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று எங்கள் டிரஸ்ட் மூலம் உதவிப் பொருட்களும், நிவாரண உதவிகளும் வழங்கினோம். அந்த வகையில் இந்த மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுவைத் தொடங்கியுள்ளோம். பெண்கள் சுய உதவிக் குழுக்களை வழி நடத்தும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ்தான் இதையும் ஆரம்பித்திருக்கிறோம் என்றாலும் கூடுதலான முயற்சி உள்ளவர்கள், கூடுதல் இழப்புகளைச் சந்திப்பவர்கள், சுய தொழிலில் பற்றுள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால் கூடுதல் மானியம் கேட்டு இதனை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சேலம் மாநகரத்தில் அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்ட முதல் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு இதுதான்” என்றார்.