

கொடைக்கானல் வருவாய்க் கோட்ட உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பதால் அரசின் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் கடைக்கோடி மலைக் கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைக்கிராமங்கள். (உள்படம்) சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்
முக்கியப் பிரச்சினைகள்
வெள்ளகவி, அசன்கொடை, சின்னூர், பெரியூர் மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். வெள்ளகவி, அசன் கொடை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆதிவாசிகளான பளியர், புலை யர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். வனவிலங்குகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பாதியில் நிற்கிறது. இதைப் புதிய சார் ஆட்சியர் தொடர வேண்டும். அரசு வழங்கிய டி.கே.டி. பட்டா விவசாய நிலங்களை போலி பட்டாக்கள் மூலம் ஆக்கிரமித்தவர்கள் மீதான நடவடிக்கையைத் தொடர வேண்டும். போலி பட்டாக்கள் வழங்க உதவிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கொடைக்கானல் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் வீரபத்ரன் கூறியதாவது:
நகரின் மையப்பகுதி ஏரியில் கழிவுகள் நிரம்பி உள்ளன. ஏரியைத் தூர்வாரிப் பாதுகாக்க வேண்டும். குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி சுற்றுச்சூழல் பகுதியாக உள்ளது. நீர் நாய்கள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். கொடைக்கானலுக்கு நீர் ஆதாரமான மனோரத்தினம் நீர்த்தேக்கத்தை மேம்படுத்தினாலே குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.
விவசாயப் பணி களுக்காக அரசு இலவசமாக வழங்கிய நிலங்களை பலர் விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மாற்றி போலி பட்டா மூலம் ஆக்கிரமித்துள்ளனர். இதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மலைகளில் விளையும் காய்கறிகள், பூண்டு உள் ளிட்டவற்றை கொள்முதல் செய்ய கொள்முதல் மையங்களை அமைக்க சார்-ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.