Published : 26 Aug 2020 07:42 AM
Last Updated : 26 Aug 2020 07:42 AM

கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு செலவிட்டதில் முறைகேடு என புகார்: மாவட்டம்தோறும் மாறுபடும் செலவின பட்டியல்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கானவர்கள் அரசால் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவற்றை, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து கொடுத்தன. அவர்கள் தங்கியிருந்த பகுதிகள், நோய் தொற்று பாதிப்புள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்காக அரசு தனியாக நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிக்காக எவ்வளவு தொகை, எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட மருந்துகள், கிருமிநாசினி போன்றவற்றின் விவரம், எத்தனை பேருக்கு அவை வழங்கப்பட்டன மற்றும் அதன் விலை விபரம், மாவட்ட வாரியாக அரசால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விவரம், அவர்களது பெயர் விவரம், அவர்களுக்கு என அரசு செலவிட்ட தொகை போன்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை பொதுத்தகவல் அலுவலர் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், கரோனா ஒழிப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தினை tnsdma.tn.gov.in என்ற இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கேள்விகளுக்கான பதிலை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான ஈரோடு மா.வள்ளிநாராயணன் இந்த தகவல்களுக்காக மனு செய்திருந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக, பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பதில்கள் வந்தவண்ணம் உள்ளன. அவை ஒவ்வொன்றும் முரண்பட்டதாக உள்ளதால், கரோனா ஒழிப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செலவின தகவல்கள் விவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் அனுப்பிய பதிலில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், குளியல் சோப், சலவை சோப், வாளி, குவளை, முகக்கவசம், தங்குமிடம், தூய்மைப்படுத்துதல், மின் கட்டணம், காட்டன் போர்வை, தலையணை மற்றும் மருத்துவ செலவினங்கள் ஒரு நபருக்கு 7 நாட்களுக்கு ரூ.3,697 செலவு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மார்ச் 28-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை 503 நபர்களை 7 முதல் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அனுப்பிய பதிலில் மே 22-ம் தேதி முதல் ஜூன் 19-ம் தேதி வரை கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.1,676 என்ற ரீதியில், 230 நபர்களுக்கு ரூ.3.85 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அனுப்பிய பதிலில், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உணவு, குடிநீர் வசதிக்காக ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு ரூ.140 மட்டும் செலவு செய்ய அரசு உத்திரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி முதல், ஜூன் 2-ம் தேதி வரை 135 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி துணை வட்டாட்சியர் அனுப்பிய பதிலில் கரோனா பணிக்காக ரூ.16 லட்சம் செலவானதாகவும், தனிநபர் வாரியாக செலவு செய்த விபரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட 489 பேருக்கு ரூ.12 லட்சம் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுப்பியுள்ள பதிலில் மொத்தம் 2,833 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தனிநபருக்கு எவ்வளவு செலவானது என்ற பதிவேடு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 77 நபர்களைத் தனிமைப்படுத்த ரூ.2.21 லட்சம் செலவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சத்தியமங்கலம் நகராட்சி அனுப்பிய பதிலில் தனியார் பள்ளியில் 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், நகராட்சியால் எந்த செலவும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பவானி நகராட்சி நிர்வாகமோ 238 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதால், எவ்வித செலவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே சீராக செலவு செய்யப்படவில்லை என்ற தகவல் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மா.வள்ளிநாராயணன் கூறியதாவது:

கரோனா பாதிப்பு காரணமாக அரசால் தனிமைப்படுத்தப்பட்ட பலரிடம் நான் பேசியபோது, உணவு, குடிநீரைத் தவிர வேறு எதுவும் தரவில்லை என்று கூறியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட தொகை அவர்களைச் சென்றடையவில்லை. அரசு அறிவித்த, ஒதுக்கிய தொகையை பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்யவும், இதில் முறைகேடு நடந்திருக்கும் என்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்ய உள்ளேன் என்றார்.

விலையில் வித்தியாசம்

சமூக ஆர்வலர் மா.வள்ளிநாராயணன் மேலும் கூறும்போது, ‘கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக, சென்னை நிறுவனத்திடம் இருந்து, லைசால் ஒரு லிட்டர் ரூ.320 வீதம், 190 லிட்டரும், கிருமிநாசினி லிட்டர் ரூ.680 வீதம் 65 லிட்டர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நிறுவனத்திடம் நான் பேசியபோது லைசால் லிட்டர் ரூ.110-க்கும், அதே வகை கிருமிநாசினி ரூ.210-க்கு விற்பனை செய்வதாகக் கூறினர்.

அதோடு, ஒரு முகக்கவசம் ரூ.10-க்கு மேல் விற்கக்கூடாது என மருந்துக்கடைகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து ஒரு முககவசம் ரூ. 15 வீதம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதற்கென வெள்ளைப்பேப்பரில் ஒரு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x