

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையை அடுத்த வள்ளுவப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.லட்சுமணன். இவர் கவரை தெருவில் சாயக்கழிவு நீர் வெளியேறும் கால்வாயில் இறங்கி அடைப்பு எடுக்கும் பணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈடுபட்டபோது, விஷவாயு கசிவு ஏற்பட்டு லட்சுமணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. லட்சமணனை காப்பாற்ற முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக சுனில்குமார் என்பவரும் கால்வாயில் விழுந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. விசாரணையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.